உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

போதியார்' என்னும் வடமொழி. 'நிகண்டனார் (கலைக்கோட்டுத் தண்டனார்)' என்பது வடமொழிச் சிதைவு. 'கோவலன்' என்பது ‘கோபாலன்’ என்பதன் திரிபு. 'கோதமனார் பிரமனார்’, ‘தாமோதரனார், "(சோழன்) நல் லுருத்திரன்' ‘(ஆவூர்க் காவிதிகள்) சாதேவனார், 'பிரமசாரி”, ‘பெருங் கௌசிகனார்', ‘பெரும்பதுமனார்' முதலிய பெயர்கள் வடமொழிப் பெயர்களே இப்பெயருள்ளவர்கள் இயற்றிய செய்யுள்கள் நற்றிணை, புறநானூறு முதலிய நூல்களில் தொகுக்கப்பட்டு உள்ளன. எனவே, சங்ககாலத்தில் வடமொழிப் பெயர்கள் இருந்ததில்லை என்று கூறுவது தவறு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே, வடநாட்டவரான ஜைன மதத்தவரும், பௌத்த மதத்தவரும், வைதீக மதத்தவரும் தென்னாட்டிற்கு வந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள. அங்ஙனமிருக்க, கடைச்சங்க நூல்களில் சில வடமொழிப் பெயர்களும் காணப்படுவதில் வியப்பில்லை. ஆகவே, வடமொழிப் பெயர்கள் காணப்படுவது கொண்டு, 'மணிமேகலை' காலத்தால் பிற்பட்ட நூலென்று கருதுவது தவறு.

மணிமேகலை சிலப்பதிகார வரலாற்று நிகழ்ச்சிகள் சேர சோழ பாண்டியர் ஆட்சிக்காலத்தில் (கடைச்சங்க காலத்தில்) நிகழ்ந்தவை. அந் நிகழ்ச்சிகள் நடந்த அண்மைக் காலத்திலேயே இந்நூல்கள் இயற்றப் பட்டவை. ஆகவே, இந்நூல்கள் கி.பி. 200-க்குள் எழுதப் பட்டவை. கி.பி. 200-க்குப் பிறகு தமிழ்நாட்டைக் களபரர் பிடித்துக் கொண்டு ஏறத்தாழக் கி.பி. 575 வரையில் அரசாண்டார்கள். ஆகவே கி.பி. 200-க்குப் பின்னர் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதப் பட்டிருக்க முடியாது. கி.பி. 200-க்குள்ளேயே எழுதப்பட்டிருக்கவேண்டும்.

அடிக்குறிப்புகள்

1. Vedanta Commentators before Sankaracharya by P.V. Kane, Proceed- ings, Fifth Indian Oriental Conference, Vol. II Manimekhalai in its His- torical Setting by Dr. S. Krishnaswami Aiyengar.

2. The Buddhism of Manimekhalai by Dr. S. Krishnaswami Aiyengar in Buddhistic Studies, Edited by B.C. Law; Manimekhalai in its Historical Setting by Dr. S. Krishnaswami Aiyengar.

3. Studies in Pallava History by Rev. H. Hearas.

4. Buddhism in Tamil Literature, chapter XXVII - Buddhistic Studies; Edited by B.C. Law.

5. Page. 110 History of Sri Vijaya by K.A. Nilakanta Sastri.