உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

6

21

அது மெய்ஞ்ஞானம் பெற வழியென்றும் கண்டு அன்றுமுதல் சிறிதளவு உணவு கொள்ளத் துணிந்தார். இதனைக்கண்ட இவருடன் இருந்த பிக்குகள் இவரைவிட்டுப் போய்விட்டார்கள். கடைசியாகப் போதி (அரச) மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருந்தபோது மெய்ஞ்ஞான ஒளியைக் காணப்பெற்றார். மெய்ஞ்ஞான ஒளியைக் கண்ட சித்தார்த்தர் புத்தர் ஆனார். ஞானமாகிய போதி கைவரப் பெற்று, பிறவித் துன்பத்தைக் கடந்து பிறவாமையாகிய இன்ப நெறியைக் கண்டார். அப்போது அவருக்கு வயது முப்பத்தைந்து.

பிறகு, புத்தர் தம்மை விட்டுச்சென்ற ஐந்து பிக்குகளைத் தேடிச் சென்று அவர்களுக்குத் தாம் கண்ட உண்மைகளைப் போதித்தார். அவர்கள் இவர்தம் உபதேசங்களைக் கேட்டு இவருக்குச் சீடர் ஆனார்கள். பிறகு, பல துறவிகள் இவருக்குச் சீடர் ஆயினர். அறுபது பேர் சீடரானவுடன் அவர்களை ஊரெங்கும் அனுப்பித் தமது பௌத்த மதத்தைப் போதிக்கச் செய்தார். தாமும் பல இடங்களுக்குச் சென்று போதித்தார். இவரது புதிய உபதேசத்தைக் கேட்டு, வேறு மதத் துறவி களும் கூட்டங் கூட்டமாகப் பௌத்தமதத்தில் சேர்ந்தார்கள். துறவிகள் மட்டும் அன்று; இல்லறத்தாராகிய அரசர்களும், நிலக்கிழார்களும், வணிகரும், செல்வந்தரும், பாமரமக்களும் பௌத்தமதத்தை மேற் கொண்டார்கள். நாற்பத்தைந்து ஆண்டுகள் நாடெங்கும் சுற்றித் திரிந்து புத்தர் தமது கொள்கையைப் போதித்தார்.

துறவிகளாகிய பிக்குகளும் பிக்குணிகளும் ஒழுக வேண்டிய முறைகளை வகுத்தார். பிக்கு சங்கத்தை ஏற்படுத்தினார்.

அரசர்களும், பிரபுக்களும் பிக்ஷுக்கள் தங்குவதற்கு விகாரை களையும் பள்ளிகளையும் அமைத்துக் கொடுத்து நிலபுலங்களைத் தானம் வழங்கினார்கள்.

இவரது முதுமைக்காலத்தில் இவருக்கு மாறாகச் சிலர் கிளம்பி இவர் உண்டாக்கிய பௌத்த மதத்தில் பிளவு உண்டாக்க முயன்றனர். ஆனால், இவர் பிளவு ஏற்படாதபடி செய்தார்.

புத்தர் பெருமான் தமது எண்பதாவது ஆண்டில் கி.மு. 483இல் குசி நகரத்தில் நிர்வாண மோட்சம் அடைந்தார். குசி நகரத்தார் இவர் உடலுக்கு இறுதிக் கடமைகளைச் செய்தார்கள். கொளுத்தப் பட்டு எஞ்சிய இவரது உடம்பின் சாம்பலும் எலும்பும் எட்டுப் பகுதியாகப்