உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

பகுக்கப்பட்டு எட்டு ஊர்களில், புதைக்கப்பட்டு அவற்றின்மேல் சைத்தியாலயங்கள் கட்டப்பட்டன.

புத்தருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சாரிபுத்திரர், மொக்கல்லானர் (மௌத்தல்யானர்), மகாகாசிபர், உபாலி, ஆநந்தர், அனுருத்தர், காத்யாயனர் முதலானவர். மகதநாட்டரசர் பிம்பசாரரும், கோசல நாட்டரசர் பசேனதி (பிரசேனஜித்) என்பவரும் இவருடைய சீடர் களாயிருந்து இவரது மதம் பரவுவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்கள்.

புத்தர் பெருமான் உயிர் வாழ்ந்திருந்த காலத்திலே பல மதங்கள் இருந்தன. சைன மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் (நிகந்தநாதபுத்த) என்பவர் இவர் காலத்தில் இருந்த சைனமதத் தலைவர். மகாவீரர், வயதினால் புத்தருக்கு மூத்தவர். சைனமதத் துறவிகள் உடலை வாட்டி ஒடுக்கி உண்ணாவிரதமிருந்து கடுநோன்பு நோற்று வந்தனர். கோசாலி மக்கலி என்பவர் உண்டாக்கிய ஆசீவக மதமும் புத்தர் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. ஆசீவக மதத்தை உண்டாக்கிய மற்கலி (மக்கலி)யும் புத்தர் காலத்திலே உயிர் வாழ்ந்திருந்தவர். (ஆசீவக மதத்தைப் பற்றி இந்நூல் இணைப்பில் காண்க.) ஆசீவக மதத் துறவிகளும், நிகண்ட (சைன) மதத் துறவிகளும் உடையின்றி அம்மணமாகத் திரிந்தார்கள். அக்காலத்தில் இருந்த இன்னொரு முக்கியமான மதம் பிராமண மதம் எனப்படும் வைதீக மதமாகும். பிராமணர்கள் ஆடு மாடு குதிரை முதலிய மிருகங்களைக் கொன்று கொலை வேள்வி செய்து வந்ததோடு சாதிப்பிரிவையும் வளர்த்து வந்தார்கள். இன்னும் சில மதங்கள் அக்காலத்தில் இருந்தன வாயினும், குறிப்பிடத்தக்கவை சைனம், ஆசீவகம், வைதீகம் என்னும் மூன்று மதங்களாம். இந்த மூன்று மதங்களும் பௌத்த மதத்தோடு ஆதிமுதல் போரிட்டுக் கொண்டிருந்தன.