உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -8

நீலகேசி என்பது சமண சமய நூல். இதில் பௌத்த மதம் ஆசிவக மதம் வைதீக மதம் முதலிய மதங்கள் கண்டிக்கப்படுகின்றன. இந்நூல் இப்போது முழுவதும் அச்சிடப்பட்டிருக்கிறது. ஆனால், வேதவாதச் சருக்கத்தில் 22-ஆம் செய்யுள் முதல் 29-ஆம் செய்யுள் வரையில் உரையுடன் காணப்படவில்லை. இந்தச் செய்யுள்களும் உரையும் காணாமற் போன வரலாறு இது: வீடுரில் ஒரு பிரபல சமண சமயத்தவர் வீட்டில் நீலகேசியின் ஏட்டுப் பிரதி இருந்தது. தமிழ் நாட்டில் இருந்த ஒரே பிரதி அதுதான். அதை ஒரு பிராமண வக்கீல், படித்து விட்டுத் தருவதாகச் சொல்லி இரவலாக வாங்கிக் கொண்டு போனார். போனவர் அதைப் பல மாதங்களாக வைத்துக் கொண்டிருந் தார். இரவல் கொடுத்த சமணர் அதைக் திருப்பிக் கொடுக்கும் படி கேட்டார். அவர் திருப்பிக் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்தார். இதற்கிடையில் சில ஆண்டுகள் கழிந்தன. பிறகு இரவல் கொடுத்த சமணர் இரவல் வாங்கிப் போன வக்கீல் மீது வழக்கு தொடர்ந்தார். உடனே வக்கீல் நீலகேசி ஏட்டைத் திருப்பிக் கொடுத்து விட்டார். ஆனால், அவர் செய்த சூதை அப்போது அந்தச் சமணர் அறிய வில்லை. இது, இந்த இருபதாம் நூற்றாண்டில் 1937-ஆம் ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்தது.

நீலகேசி ஒரே பிரதியிருப்பதால் அதை அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டுமென்று தத்துவக்கலைப் பேராசிரியர் திரு. அ. சக்கரவர்த்தி நாயனாரவர்கள், அந்த நீலகேசி ஏட்டுப் பிரதியைப் பெற்று அச்சிட்டார். அது சென்னை இராயப்பேட்டை சாது அச்சுக் கூடத்தில் அச்சிடப் பட்டது. ஏட்டுப் பிரதியை ஆராய்ந்து பரிசோதித்துக் கொடுத்தவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள். அப்போது தான் மேலே குறிப்பிடப்பட்ட வக்கீலின் சூழ்ச்சி தெரிய வந்தது. வேதவாதச் சருக்கத்தில் எட்டு செய்யுள்களும் அவற்றின் பழைய உரைகளும் இருந்த ஏடுகள் காணப்படவில்லை. இரவல் வாங்கிக் கொண்டு போன பிராமண வக்கீலின் செயல் இது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எட்டுச் செய்யுள்கள் இல்லாமலே நீலகேசி அச்சிடப்பட்டது. சமயப் பகை காரணமாக, இந்த இருபதாம் நூற்றாண்டில், மதிப்புக்குரிய ஒரு வக்கீல் இவ்வாறு ஏடுகளைக் கிழித்தெறிந்து விட்டார் என்றால். சமயப் பகை முதிர்ச்சியடைந்திருந்த பழங்காலத்தில் எத்தனை ஏட்டுச் சுவடிகள் அழிக்கப்பட்டிருக்கும் என்பதை இதிலிருந்து ஊகிக்கலாம்.