உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

225

இயற்கைப்படியே தமிழ் மொழியிலும் அயல் மொழிச் சொற்கள் கலந்துள்ளன.

தமிழும் பிறமொழிகளும்

சங்க காலத்திலே யவனர் (கிரேக்கர்) தமிழ் நாட்டுடன் கடல் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தபடியால் கிரேக்க மொழிச் சொற்கள் சில தமிழ் மொழியிலும், தமிழ் மொழிச் சொற்கள் சில கிரேக்க மொழியிலும் கலந்துள்ளன. பௌத்தம், சமணம். வைதீகம் ஆகிய சமய மதங்களின் சார்பாக வட நாட்டாருக்கும் தமிழ் நாட்டாருக்கும் தொடர்பு ஏற்பட்ட காரணத்தினால் தமிழ் மொழியில், பாலி, சூரசேனி முதலிய பாகத (பிராகிருத) மொழிச் சொற்களும். வட மொழிச் சொற்களும் கலந்து விட்டன. அது போன்று தமிழ் மொழிச் சொற்கள் சில பிராகிருத வட மொழிகளில் கலந்து விட்டன.

முஸ்லிம் (நவாபு ஆட்சி காரணமாகவும், இஸ்லாம் சமயத் தொடர்பு காரணமாகவும் அரபு, பாரசீகம், உருது, இந்தி மொழிச் சொற்கள் சில தமிழில் கலந்துள்ளன. போர்ச்சுகீசீயர் தமிழகத்துடன் வாணிகத் துறையிலும் சமயத்துறையிலும் தொடர்பு கொண்டிருந்த படியால் போர்ச்சுகீசு மொழிச் சொற்கள் சில தமிழில் கலந்தன. ஆங்கிலேயரின் வாணிகத் தொடர்பும், ஆட்சித் தொடர்பும், சமயத் தொடர்பும் ஏற்பட்டிருந்த காரணத்தினால் தமிழில் ஆங்கில மொழிச் சொற்கள் சில கலந்தன. அவ்வாறே, தமிழ் மொழிச் சொற்கள் சில அந்த மொழிகளிலே கலந்து விட்டன. இது தவிர்க்க முடியாத பொதுவான இயற்கை. சில சமயங்களில், ஒரு மொழி இன்னொரு மொழி மேல் ஆதிக்கம் செலுத்த நேரிட்டால், ஆதிக்கம் பெற்ற மொழி வளர்ந்தும்

திக்கத்துக்குள்ளான மொழி தாழ்ந்தும் போவதைக் காண்கிறோம். ஆகையால், தங்கள் தாய்மொழியின் மேல் வேறு மொழி ஆட்சி (ஆதிக்கம்) செலுத்தாதபடி பார்த்துக் கொள்வது ஒவ்வொரு மொழியினரின் கடமையாகும்.

பௌத்தம், சமணம் என்னும் சிரமண சமயங்களுக்கும் வைதீக சமயமான பிராமண சமயத்திற்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழ் நாட்டுன் தொடர்பு இருந்த படியால் அந்தச் சமயங்களின் மூலமாகத் தமிழில் பிராகிருத மொழிச் சொற்களும் வடமொழிச் சொற்களும் கலந்து விட்டன. பௌத்தம், சமணம் என்னும் சமயங்களில் ஒன்றான பௌத்த மதத்தின் தொடர்பினால் தமிழ் மொழிக்கு ஏற்பட்ட சிறப்புக்களைக் கூறுவோம்.