உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

பௌத்தமும் தமிழும்

இன்றைக்கு இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், அசோகச் சக்கரவர்த்தியின் காலத்தில் பெளத்த சமயம் முதன் முதலாகத் தமிழகத்துடன் தொடர்பு கொண்டது. இச் செய்தியை அசோகச் சக்கரவர்த்தி எழுதியுள்ள பாறைக் கற்சாசனங்களிலிருந்து அறிகிறோம். சௌராஷ்டிர தேசத்தில் கிர்னார் நகரத்திற்கு அருகில் ஒரு கற்பாறையில் எழுதப்பட்ட அசோக சாசனம், சோழ பாண்டிய சத்தியபுத்திர கேரளபுத்திர நாடுகளுக்கு அவர் பௌத்த பிக்குகளை அனுப்பிய செய்தியைக் கூறுகிறது. இந்தச் செய்தியையே, பிஷாவர் நகரத்திற்கு அருகில் இருக்கிற இன்னொரு சாசன எழுத்து கூறுகிறது.

பௌத்த சமயம் மிஷனரி சமயம் அஃதாவது எல்லா நாட்டிலும் தன் சமயக் கொள்கையைப் பரப்புகிற சமயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்த பெளத்த பிக்குகள் (துறவிகள்) தங்கள் சமயப் பணியைத் தொடங்கித் தொடர்ந்து நடத்தினார்கள். அதனால் பெளத்த சமயம் தமிழ் நாட்டில் பரவிச் செழித்து வளர்ந்தது. பிறகு, கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையில் பக்தி இயக்கத்தினால் எதிர்க்கப்பட்டுச் சிறிது தாழ்ச்சியடைந்த போதிலும் பௌத்த சமயம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டில் நின்று நிலவியது. இவ்வாறு பதினைந்து நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நிலை பெற்று இருந்த பௌத்த சமயத்தினாலே தமிழ் மொழிக்குச் சில நன்மைகளாவது ஏற்பட்டிருக்கக் கூடுமல்லவா? அவற்றை இங்குக் காண்போம்.

எந்தெந்த நாட்டில் எந்தெந்த மொழி பேசப்படுகிறதோ அந்தந்த மொழியில் பௌத்த சமயப் பிரசாரம் செய்ய வேண்டுமென்று கௌதம புத்தர் கட்டளையிட்டார். பகவன் புத்தர் உயிர் வாழ்ந்திருந்த காலத்தில் இரண்டு சீடர்கள் அவரிடம் சென்று, பகவனுடைய போதனைகளை வடமொழியில் எழுதி வைப்பது நல்லது என்று கூறினார்கள். இந்த யோசனையைக் கௌதம புத்தர் வன்மையாகக் கண்டித்தார். மக்கள் பேசாத, யாரோ படித்தவர் சிலர் மாத்திரம் அறியும் வட மொழியில் நாட்டு மக்களுக்குப் போதித்தால், மக்கள் அதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆகையால், மக்கள் பேசுகிற தாய் மொழியிலேயே பௌத்த சமயத்தைப் போதிக்க வேண்டும் என்று பகவன் புத்தர் கட்டளையிட்டார் என்று கல்ல வக்கம் என்னும் பௌத்த நூலில்