உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

229

நூலின் உரையிலும், வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரையிலும் இதன் செய்யுட்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. புறத்திரட்டு என்னும் நூலிலும் குண்டலகேசிச் செய்யுட்கள் சில தொகுக்கப்பட்டுள்ளன. குண்டலகேசி காவியத்தை எழுதின ஆசிரியரின் பெயர் நாதகுப்தனார் என்பது. இவருக்கு நாகசேன.ர் என்னும் பெயர் இருந்ததென்று விமதி வினோதனீ என்னும் பாலிமொழி நூல் கூறுகிறது.

சித்தாந்தக் தொகை: பௌத்த சமயச் சித்தாந்தத்தைக் கூறுகிறது. இந்நூல் என்பது இதன் பெயரிலிருந்தே அறியலாம். (சித்தாந்தம் முடிந்த முடிவு.) சிவஞான சித்தியார் என்னும் சைவ சமய நூலுக்கு ஞானப்பிரகாசம் எழுதிய உரையில் (பரபக்கம். சௌத்திராந்தகன் மதம் 2, 31-ஆம் பாட்டுக்களின் உரை) இந்த நூலிலிருந்து ஒரு செய்யுள் மேற்கோள் காட்டப்பட்டிருககிறது. இந்த நூலைப் பற்றி வேறு எதுவும் தெரியவில்லை.

திருப்பதிகம்: பௌத்த சமயத் தெய்வங்களின் மேல் பாடப்பட்ட தோத்திரப்பாடல்கள் என்று இதன் பெயரிலிருந்து தெரிகிறது. சிவஞான சித்தியாருக்கு ஞானப்பிரகாசர் எழுதிய உரையில் இந்நூற் செய்யுள் மேற்கோள் காட்டப்படுகிறது. (பரபக்கம், சௌத்திராந்தகன் மதம். 2- ஆம் செய்யுள் உரை ஷ மறுதலை, 8-ஆம் செய்யுள் உரை.)

விம்பசாரக் கதை: பிம்பசாரன் என்னும் அரசன் புத்த பகவன் இருந்த காலத்தில் மகத தேசத்தை அரசாண்டவன். பௌத்த சமயத்தை ஆதரித்தவன். அவனைப் பற்றிய காவியம் இது. நீலகேசி என்னும் சமண நூலின் உரையிலும் (190-ஆம் பாட்டு உரை), சிவஞான சித்தியார் என்னும் சைவ நூல் உரையிலும் (பரபக்கம், சௌத்ராந்தகன் மறுதலை 5-ஆம் செய்யுள் உரை) விம்பசாரக் கதையிலிருந்து சில செய்யுள் அடிகள் மேற்கோள் காட்டப் பட்டுள்ளன. இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

புத்த ஜாதகக் கதைகள்: புத்தருடைய பழம் பிறப்புச் செய்திகளைக் கூறுவது புத்த ஜாதகக் கதைகள். பாலி மொழியில் உள்ள இந்தக் கதைகளைத் தமிழில் செய்யுளாகவும் உரைநடையாகவும் எழுதி யிருந்தனர் என்பது தெரிகின்றது. நூல் முழுவதும் கிடைக்க வில்லை. சில செய்யுட்கள் மட்டும் நீலகேசி உரையில் மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ளன.