உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

எண்ணங்களை நினைத்து மனத்தை ஒரு நிலையில் நிறுத்தப் பழகுதல். இந்தப் சமாதிப் (மன அடக்கம்) பழக்கம், புலன் களையும் மனத்தையும் அடக்கியாள உதவுகிறது. அஞ்ஞானம், ஆசை, பகை முதலிய தீய எண்ணங்கள் நீங்கி ஞானம் வளர உதவுகிறது.

இந்த அஷ்டாங்க மார்க்கத்தில் நற்காட்சி நல்லொழுக்கம் ஆகிய இரண்டினாலே ஞானம் (பஞ்ஞா) உண்டாகிறது. நல் வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை ஆகிய இம்மூன்றினாலே நல்லொழுக்கம் (சீலம்) ஏற்படுகிறது. நன்முயற்சி, நற்கடைப்பிடி, நற்றியானம் ஆகிய மூன்றினாலே அடக்கம் (சமாதி) ஏற்படுகிறது.

நான்கு வாய்மைகளை அறிந்து அஷ்டாங்க மார்க்கத்தில் ஒழுகும் பிக்ஷவானவர் நிர்வாண மோக்ஷம் பெறுவதற்கு ஞானம், தியானம் ஆகிய இரண்டையும் அடைய வேண்டும்.

"ஞானம் (மெய்யறிவு) இல்லாதவருக்கும் தியானம் இல்லை. தியானம் இல்லாவருக்கு ஞானம் இல்லை. யார் ஒருவர் ஞானமும் தியானமும் உள்ளவரோ அவரே நிர்வாண, மோக்ஷத்தின் அருகில் இருக்கிறார்" என்றும், (பிக்குவர்க்கம் 13.)

“மனத்தை ஒருநிலைப் படுத்துவதனாலே (யோகத்தினாலே) ஞானத்தைப் பெறலாம். யோகம் செய்யாவிட்டால் ஞானம் வளராது. வளர்வதும் தேய்வதும் ஆன இந்த இரண்டு வழிகளையும் அறிந்து ஞானம் வளர்வதற்குரிய வழியில் நடப்பாயாக” என்றும் (மார்க்க வர்க்கம் 10) தம்மபதம் கூறுகிறது.

“யோகம் (மனத்தை ஒருநிலைப் படுத்துவது) நான்கு வகைப்படும். அவை மேத்தை, கருணை, முதிதை, உபேக்ஷை என்பன. இந்நான்கையும் பிரமவிகாரம் என்று கூறுவர். இந்நான்கையும் விளக்கிக் கூறுவோம்:

மேத்தை: இது மைத்திரி என்றும் கூறப்படும். அதாவது அன்புடைமை. இந்த மைத்திரி (அன்பு) தியானத்தினாலே பகைமை உணர்ச்சி அழிந்து அன்பும் அருளும் வளர்கிறது. சூத்திர நிபாதத்தில் மேத்தை சூத்திரத்தில் இவ்வாறு கூறப்படுகிறது: “எல்லா உயிர்களும் மகிழ்ச்சியோடு இருப்பதாக. அவையெல்லாம் மகிழ்ச்சியோடு சுகமாக வாழ்வதாக. எல்லா உயிர்களும், வலிவுள்ளவையும் வலிவற்றவையும்