உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சமயங்கள் வளர்த்த தமிழ்*

ஒவ்வொரு மொழியும் அதைப் பேசுகிற மக்களின் கருத்துக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப வளர்ச்சியடைகிறது. மக்களின் பண்பாடும் கருத்துக்களும் பெரும்பாலும் அவர்கள் சார்ந்துள்ள மதக் கொள்கை யையொட்டி அமைகின்றன. பண்டைக் காலத்தில், இலக்கியங்களை வளப்படுத்துவதில் மதங்கள் முதன்மையாக இருந்தன. மதங்கள் வழியாக மக்களுக்குக் கொள்கைள் வளர்ந்து, அந்தக் கொள்கைகள் அவர்களின் இலக்கியங்களிலே இடம் பெற்றன. இந்த முறைப்படியே, தமிழ் மொழியும் பண்டைக் காலத்திலே சமயங்கள் சார்பாக வளர்ந்து வளம் பெற்றது.

தமிழ் மொழி இலக்கிய வரலாற்றை இரண்டு பெரும் பகுதி களாகப் பிரிக்கலாம். அவை, சமயச் சார்பற்ற காலம், சமயச் சார்புடைய காலம் என்பன.

தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்கள் இருந்தன என்று வரலாறு கூறுகிறது. கடைச்சங்க காலம் கி.பி. 300-க்கு முற்பட்ட காலம் என்பது பொதுவான கருத்து. எனவே, கி.பி.300-க்கு முற்பட்ட காலம் சங்க காலமாகும். அந்தக் காலத்திலே தமிழ் இலக்கியம் பெரும்பாலும் சமயச் சார்பு இல்லாமல் இருந்தது. சங்க காலத்தில் தமிழர் வாழ்க்கை காதல், வீரம் என்னும் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. (காதலை அகம் என்றும், வீரத்தைப் புறம் என்றும் கூறுவர்.) ஆகவே, சங்க காலத்திலே அகப்பொருள் இலக்கியங்களும் புறப் பொருள் இலக்கியங்களும் பெரிதும் வளர்ச்சி யடைந்தன. நீதியையும் அறத்தையும் ஒழுக்கத்தையும் கூறுகிற இலக்கியங்களும் சங்க காலத்தில் இருந்தன. ஆனால், அவை காஞ்சி என்று பெயர் பெற்றுப் புறப்பொருள் இலக்கியத்தில் இடம் பெற்றிருந்

தன.

சங்க காலத்து மக்களின் கொள்கையும் பண்பாடும் காதலும் வீரமுமாக இருந்தபடியால், அவை சார்பான அகப்பொருள் புறப்பொருள் இலக்கியங்களே அக்காலத்தில் பெரிதும் எழுதப்பட்டன. * மயிலை சீனி. வேங்கடசாமி சமயங்கள் வளர்த்த தமிழ் (1966) எனும் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.