உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

51

ஜைனம், வைதீகம் என்னும் புறப்பகை ஒருபுறமிருக்க, அகப் பகையும் தோன்றிவிட்டது. பௌத்தத்திற்குள்ளேயே சில பிரிவும் உண்டாயின. ஈன யானம், மகா யானம் என்னும் இரண்டு பெரும் பிரிவுகள் தோன்றி அவற்றினின்றும் உட்பிரிவுகள் பல கிளைத்து வளர்ந்தன. சிராவகயானம், மகாயானம், மத்திரயானம் என்னும் மூன்று பிரிவுகளை நீலகேசியுரையினால் அறிகின்றோம். 'ஐயுறும் மணரும், அறுவகைத் தேரரும்' என்று ஆறுவகைப் பிரிவினரான தேரர்கள் (தேரர் - பௌத்த பிக்குகள்) இருந்ததாகத் திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் கூறுகின்றார். இந்தப் பௌத்த உட்பிரிவினர் தமக் குள்ளேயே தர்க்கம் செய்து போரிட்டுக் கொண்டனர். இந்த உட் பிரிவுகளால் அந்த மதத்தின் வலிமை குன்றி விட்டது. உடம்பில் தோன்றிய நோய் நாளடைவில் உடலையே அழித்துவிடுவதுபோல, இந்த உட்பிரிவுகளே பௌத்த மதத்தின் வீழ்ச்சிக்கு முதற் காரணமா யிருந்தன.

அன்றியும், பொதுமக்களாலும் அரசர்களாலும் செல்வந்தர்களாலும் அளிக்கப்பட்ட செல்வத்தினால், பௌத்த விகாரைகளில் வசித்த பிக்ஷுக்கள் தங்கள் கடமையை மறந்து, செல்வத்தின் இன்பங்களைத் துய்க்கத் தொடங்கிவிட்டார்கள். ஆகவே, இவர்களிடத்தில் பொது மக்களிடமிருந்த மதிப்புக் குன்றவும், பௌத்தம் தன் செல்வாக்கினை இழக்க நேரிட்டது. இவை வ போன்ற குற்றங் குறைகளும் உட்பிரிவுகளும் ஏற்படாமலிருந்தால், பௌத்த மதம் தனது புறப்பகை மதங்களுடன் போரிட்டுக் கொண்டே கொண்டே இன்றளவும் ஓரளவு நிலைபெற்றிருப்பினும் இருக்கும். ஆயினும், குறைபாடுகளும் உட்பிரிவுகளும் ஏற்பட்டுவிட்ட படியால் அது புறப்பகையாகிய ஜைன வைதீக மதங்களுடன் போராட முடியாமல் வீழ்ச்சியடைந்துவிட்டது.

கி.பி. ஐந்தாவது அல்லது ஆறாவது நூற்றாண்டிற்குப் பின்னர், பௌத்தத்தின் சிறப்புக் குன்றவும், ஜைன மதம் தலையெடுத்துச் செல்வாக்குப்பெறத் தொடங்கிற்று. ஆனால், அப்பொழுதும் வைதீக மதம் உயர்நிலை அடைய முடியாமலேயே இருந்தது. பௌத்த மத வீழ்ச்சிக்குப் பிறகு, ஜைன மதம் செல்வாக்குப் பெற்றது. பெற்றதும், தனது கொள்கைக்கும் வளர்ச்சிக்கும் பெருந்தடையாயிருந்த பௌத்தத்தை முன்னைவிடக் கடுமையாகத் தாக்கி, அதை நிலைகுலையச் செய்துவிட்டது. பௌத்தக் கோயில்கள் ஜைனக் கோயில்களாக மாற்றப்பட்டன. பௌத்த பிக்ஷுக்கள் வசித்த மலைக்குகைகள், ஜைனக் குகைகளாக மாற்றப்