உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -8

பட்டன. அகளங்கர் என்னும் ஜைனர், கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் காஞ்சீபுரத்தில் உள்ள காமக்கோட்டத்தில், பெளத்தருடன் சமயவாதம் செய்து அவரைத் தோற்பித்துச் சிங்கள நாட்டிற்குத் துரத்திவிட்டார் என்னும் செய்தி பலர் அறிந்ததொன்றே. ஆனால், பெளத்தத்தை வீழ்ச்சியடையச் செய்து ஜைனம் வெற்றிக்கொடி நாட்டியபோதிலும், பௌத்தம் முழுவதும் அழிந்துவிடவில்லை. வலிமையிழந்த நிலையில் அந்த மதம் தமிழ்நாட்டில் ஓரளவில் ஊடாடிக் கொண்டிருந்தது.

இவ்வாறு மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள் சென்றன. பிறகு, இதுகாறும் பின்னணியில் இருந்த வைதீக மதம் மெல்ல மெல்ல வலிமைபெறத் தொடங்கி, ஜைனமதத்தை வீழ்த்தி, உன்னத நிலை யடையத் தொடங்கிற்று. இக்காலத்தில்தான் பௌத்த மதம் அடியோடு வீழ்ச்சியடைந்து முற்றும் மறைந்துவிட்டது.

வைதீக பிராமண மதம் யாகத்தில் உயிர்க்கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தபடியாலும், நால்வகைச் சாதிப் பாகுபாடு உடையதாய்ப் பிராமணர் மட்டும் உயர்ந்தவர் என்னும் கொள்கை யுடையதாயிருந்தபடியாலும், இவற்றிற்கு மேலாக, பிராமணர் தவிர மற்றவர்கள் வேதத்தைப் படிக்கக்கூடாது என்று தடுத்துவந்தபடியாலும், இவ்விதக் குறுகிய கோட்பாட்டினையுடைய வைதீக மதத்தில் மக்களுக்கு மனம் செல்லவில்லை. ஆகவே, கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு வந்த வைதீக பிராமண மதம் கி.பி. ஆறாவது, அல்லது ஏழாவது நூற்றாண்டு வரையில் பொது மக்களின் செல்வாக்குப் பெறாமல் ஒதுக்கப்பட்டே வந்தது.

கி.பி. ஆறாவது, அல்லது ஏழாவது நூற்றாண்டுகளுக்குப் பின்னர், வைதீக மதம் தனது அடிப்படைக் கொள்கைகள் சில வற்றில் மாறுதல் செய்துகொண்டு புத்துயிர் பெற்றது. அஃதாவது, யாகங்களில் உயிர்க்கொலை செய்வதை நிறுத்தியதோடு, கொற்றவை, முருகன், சிவன், திருமால் முதலான திராவிட (தமிழ்த்) தெய்வங்களைத் தன் மதக் கடவுளராக ஏற்றுக்கொண்டு புதிய உருவம் பெற்றுவிட்டது. இந்த மாறுதலுடன், ‘பக்தி’ இயக்கத்தை மேற்கொண்டபடியால், இந்த மதம் பொதுமக்கள் ஆதரவைப் பெறவும், பண்டைப் பகையுள்ள ஜைன பௌத்த மதங்களைக் கடுமையாகத் தாக்கித் தோற்பிக்கவும் முடிந்தது. சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர், திருமங்கையாழ்வார் போன்ற சைவ வைணவத் தொண்டர்கள் தோன்றிப் புதிய இந்து மதத்தை நிலை நாட்டவும், ஜைன பௌத்த மதங்களை ஒழிக்கவும் தலைப்பட்டார்கள்.