உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

போதனைகளை அறிந்துகொள்ள விரும்பினார். உத்ரகர் இவரைச் சீடராக ஏற்றுக்கொண்டு தாம் அறிந்திருந்த எல்லாவற்றையும் இவருக்கு உபதேசம் செய்தார். இவருடைய உபதேசம், ஆளார முனிவருடைய உபதேசத்தைப் போன்றதே. ஆயினும் அதைவிட அதிகமாக எட்டாவது ஸமாபத்தியை (தியானத்தை)யும் கொண்டது.

கௌதம முனிவர் உத்ரகர் போதித்தவற்றைக் கேட்டு அவற்றின் படி யோகாப்பியாசம் செய்து எட்டாது ஸமாபத்தியையும் கைவரப் பெற்றார். பிறகு, உத்ரக முனிவரிடம் சென்று தாம் எட்டாவது ஸமா பத்தியைக் கைவரப்பெற்றதைக் கூறி இதற்கு மேலாக ஏதேனும் உண்டா என்று கேட்டார். உத்ரக முனிவர், “இவ்வளவுதான்; இதற்குமேல் ஒன்றும் கிடையாது” என்று கூறி, ஆளார காலாமர் செய்தது போலவே உத்ரகரும் கௌதமரைத் தமக்குச் சமமாக வைத்துத் தமது சீடர்களில் சரிபாதி தொகையினரை இவருக்கு மாணவராகக் கொடுத்துத் தமக்குச் சமமான ஆசாரிய பதவியையளித்துப் பாராட்டினார். ஆனால், எட்டாவது ஸமாபத்தியும் மோக்ஷத்திற்கு வழியல்ல என்று அறிந்த கௌதம முனிவர், ஆசாரிய பதவியை ஏற்றுக் கொள்ளாமல் ஆசிரமத்தை விட்டுப் போய்விட்டார். கௌதமரின் மன உறுதி

கபிலவத்து நகரத்தை விட்டுப் புறப்பட்ட அமைச்சர்கள் இருவரும், சித்தார்த்த குமரன் சென்ற வழியைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அவரைத் தேடிப் பின்தொடர்ந்து சென்றார்கள். கடைசியாக அவர்கள் பார்க்கவ முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தார்கள். முனிவர் அவர்களை வரவேற்று அவர்கள் வந்த காரியத்தைக் கேட்டார். சித்தார்த்த குமரன் ஆசிரமத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரை அழைத்துப் போக வந்ததாக அமைச்சர்கள் கூறினார்கள். பார்க்கவ முனிவர் இவ்வாறு கூறி னார்: “நீங்கள் கேள்விப்பட்டது உண்மையே. சித்தார்த்த குமரன் இங்கு வந்து சிலநாள் தங்கியிருந்தார். பிறகு எமது கொள்கை அவருக்குப் பிடிக்காமல் இவ்விடத்தைவிட்டுப் போய் விட்டார். அவர், ஆளாரகாலாமருடைய ஆசிரமத்துக்குப் போனதாகத் தெரிகிறது” என்று கூறினார்.

உடனே அமைச்சர்கள் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு, ஆளார காலாமர் ஆசிரமத்துக்கு வந்தார்கள். வந்து அங்குப் போதிசத்துவரைக் கண்டார்கள். போதிசத்துவராகிய கௌதம முனிவர், அவர்களை