பக்கம்:மயில்விழி மான்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மயில்விழி மான்

வந்தது. செந்தமிழ்க் கவிஞர்கள் பலர் இனிய எளிய செந்தமிழில் அழகிய கவிகளும் காவியங்களும் இயற்றி வந்தார்கள். மதுரையில் முதலாவது தமிழ்ச்சங்கம் சிறப்பாக நடைபெற்று வந்தது.

அந்தச் சந்தர்ப்பத்தில் மேலைக் கடல் பிரதேசத்து நாடுகளிலிருந்து காட்டுமிராண்டிகளான அநாகரிக ராட்சஸமக்கள் சிலர் கப்பலேறி வந்தார்கள். அவர்கள் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் அவர்களை வேறு நாடுகளைத் தேடிப் போகும்படி செய்தது. அவர்கள் முதலில் தமிழ்நாட்டில் இறங்கி அத்தீவைத் தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். அவர்களுடைய அரச பரம்பரையில் இராவணன் என்னும் ஒரு ராட்சதன் தோன்றினான். அவன் அறிவும், ஆற்றலும் மிக்கவன். ஆனால் மிகமிகப் பொல்லாதவன்.

இராவண குலத்தைச் சேர்ந்த ராட்சதர்கள் நர மாமிச பட்சிணிகள். அவர்கள் நாட்டிலே பஞ்ச காலத்தில் அந்தப் பயங்கரமான வழக்கம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. இலங்கைக்கு வந்து குடியேறிய பிறகு, அடிக்கடி தமிழகத்துக்கு அவர்கள் கும்பல் கும்பலாக வருவதும், திடீரென்று தமிழர்களைத் தாக்கிக் கொல்வதும், கொன்றவர்களைத் தின்று விட்டுப் போவதும் வழக்கமாயிற்று. தமிழர்களைத் தின்று பார்த்த போது, அவர்கள் வேறு எந்தச் சாதியைக் காட்டிலும் தமிழ்ச் சாதியின் உடம்பு அதிகச் சுவையுடன் இருக்கிறது என்று கண்டார்கள். இழுமெனும் ஓசையுடைய மதுரத் தமிழ் மொழி இனிமைக்கும் பெயர் பெற்றதன்றோ? 'அமுதம்' என்ற சொல் மருவித் 'தமிழ்' என்று ஆயிற்று என்றும் சொல்கிறார்கள்