பக்கம்:மயில்விழி மான்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயில்விழி மான்

33

அல்லவா? தமிழர்களின் உடல் தின்பதற்கு ருசியாயிருந்ததுடன், அவர்களைத் தின்றால் ஆயுள் வளரும், ஆயிரக்கணக்கான வருடங்கள் சாகாமல் இருக்கலாம் என்ற நம்பிக்கையும் இராவண குலத்து ராட்சஸர்களுக்கு ஏற்பட்டது. இதன் பலன் என்னவென்றால், ஒரு சில வருடங்களுக்குள் தமிழ் நாட்டில் தமிழ் மக்களின் ஜனத்தொகை மிகவும் குறைந்து விட்டது. போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று போர் செய்வதாயிருந்தால் தமிழர்களை அந்த ராட்சஸர்களால் கூட வென்றிருக்க முடியாது. ஆனால் எதிர்பாராத இரவு நேரங்களில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது வந்து தாக்கிக் கொன்று தின்று விடும் ராட்சஸர்களை எதிர்த்துப் போராடுவது எப்படி? சேர சோழ பாண்டிய ராஜ்யங்களில் மிகச் சிறந்த பட்டணங்கள், கிராமங்கள் எல்லாம் பாழாய்ப் போய்க் கொண்டிருந்தன. ராட்சஸர்களிடமிருந்து தப்பிப் பிழைத்த சிலர் மலை உச்சிகளில் உள்ள குகைகளிலும் கடற் கரையோரங்களிலிருந்த காடுகளிலும் ஒளிந்து வாழத் தொடங்கினார்கள்.

தமிழின் பெருமையை உணர்ந்து உலகமறியச் செய்த மாமுனிவர் அகஸ்தியர், இந்த அபாயத்திலிருந்து தமிழர்களைத் தப்புவிப்பதற்கு ஓர் உபாயம் செய்து பார்த்தார். தமிழ் மிக்க இனிமையான மொழியாயிருப்பதால் அல்லவா அம்மொழியைப் பேசும் தமிழர்களுக்கு இந்தக் கதி நேருகிறது? தமிழைச் சற்றுக் கடினமான மொழி ஆக்குவதற்காக மிக்கப் பிரயத்தனப்பட்டுத் தமிழ் இலக்கணம் ஒன்று செய்து கொடுத்தார்.

99-3