பக்கம்:மருதநில மங்கை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102 புலவர் கா. கோவிந்தன்


படைக்கலங்களைப் போட்டுச் செல்லும் கருத்தோடு, கள்வர் சிலர் அக்கோட்டையுள் நுழைவதுபோல் நம் நலத்தை அழித்து, நலம் அழிந்த நம் நிலை கண்டு நகைக்கும் கருத்தோடு வந்ததல்லது, நம்பால் கொண்ட அன்பால் வந்திலர் என்பதை அறிவேனாதலின், அவர் வருகை கண்டு மகிழ்ந்திலேன்!” என்று கூறினாள்.

மனைவி, தன்மீது குற்றம் சாட்டிக் கூறவே, மறைவிடம் விட்டு, அவள் முன் வந்து நின்றான். நின்று, “பெண்ணே ! பெரிய மதில் சூழ்ந்த அகன்ற கோட்டையைக் காக்கும் காவலர், கோட்டையுள் கள்வர் எவரும் புகாதிருக்கவும், கள்வரால் ஏதம் உண்டாகும் என அஞ்சிய அச்சத்தால், கள்வரைக் கண்டோம் எனக் கூறிக் கலங்குவார் போல், எம்மை விட்டு அகன்று நின்று, நான் செய்யாத ஒரு குற்றத்தைச் செய்ததாகச் சொல்லிச், சினந்து வருந்தாதே. நான் உன் அடிமை. உன் ஆணையை மீறும் உள்ள உறுதி இவ்வடிமைக்கு இல்லை!” என்று கூறிப் பணிந்து நின்றான்.

“குற்றம் புரிந்திலேன்!” எனக் கணவன் கூறக்கேட்ட அவள், அவன் குற்றம் உடையன் என்பதை ஊர் அறியச் செய்வது , தன் கடனே எனக் கருதினாள். அதற்கேற்ப, அவனும், பரத்தையைப் புணர்ந்தவிடத்து அவள் மாலையின் மலர்கள் சில, இதழ் அற்று அவன்மீது உதிர, அதை அறியாது, அம்மலர்த் துகள்களோடு, அவள் முன் வந்து நின்றான். அதை அதுவரையும் காணதிருந்தவன், அவள் தன்மீதும் குற்றம் சாட்டிக் கூறவே, அவன் ஒருமுறை தன்னை நோக்கிக் கொண்டான். தன்மீது மலர் இதழ்கள் சிந்திக் கிடப்பதை அறிந்தான். அதை அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/104&oldid=1129667" இலிருந்து மீள்விக்கப்பட்டது