பக்கம்:மருதநில மங்கை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110புலவர் கா. கோவிந்தன்


தாயின் கோபத்தைக் கண்டாள் அவ்வேவல் மகள். நாழிகை கடந்தது என்பதற்கே இவ்வாறு சினப்பவள், இவனை அழைத்துச் சென்ற இடங்களைக் கூறினால் நம்மை உயிரோடு விடாள் என அஞ்சினாள். ஆயினும் உண்மையை மறைப்பதும் ஆகாது என எண்ணினாள். அதனால், “தாயே! சென்ற இடங்களைக் கூறகிறேன். சினவாது அமைதியாகக் கேட்பாயாக என வேண்டிக் கொள்கிறேன்.” என அஞ்சி அஞ்சிக் கூறினாள். அவள் அச்சம் கண்ட தாய், “உன்னைக் கோபித்து ஒன்றும் செய்யேன். உண்மையைக் கூறு,” என்றாள்.

அப்பெண் கோயிலுக்குச் சென்றது முதல் நடந்த நிகழ்ச்சிகளை முறையாகக் கூறிக் கொண்டே வந்தாள். அவள் கூறுவனவற்றை அமைதியாகக் கேட்டுவந்த தாய், அவள் மகன் புதுப்பரத்தை இல்லுள் புகுந்தான் என்று கூறக்கேட்ட உடனே கடுங்கோபம் கொண்டாள். அவள் கண்கள் சிவந்தன. புருவங்கள் வளைந்து நிமிர்ந்தன. மகனைப் பிடித்து இழுத்து முன் நிறத்தினாள். “ஏடி! ஓடி ஒரு கோல் கொண்டுவா!” என அவளை விரட்டினாள். தாயின் செயல்கண்டு நடுங்கி நிற்கும் அம்மகனை, “ஏடா! அவள் யார்? உனக்கு என்ன உறவு? அவள்பால் நீ செல்லலாமோ? பார்த்த உணவைப் பருந்தடித்துச் செல்வது போல், நான் இங்கு வருந்தி வாடுமாறு, உன் தந்தையைக் கைப்பற்றித் தன் வயத்தளாக்கிக் கொண்ட கொடியவள் அவள். அவனை இமைப் பொழுதும் பிரியாது, அவனோடு எப்போதும் புணர்ந்து, அவன் மார்பிலும், தோளிலும், எள்ளிருக்கும் இடமும் விடாமல், தன் வளையாலும், தொடியாலும் வடுக்கள் பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/112&oldid=1129761" இலிருந்து மீள்விக்கப்பட்டது