பக்கம்:மருதநில மங்கை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை109


நீயும் ஆகிவிடாதே! உன்னைக் காதலிக்கும் மகளிரை வருந்த விடும் வழக்கத்தை அவன் பால் கற்றுக் கொள்ளாதே!” எனக் கண்ணீர் மல்கக் கூறி, அவனை அவ்ஏவல் மகள்பால் கொடுத்து அனுப்பினாள்.

மகனோடு, அவன் மனை நோக்கிச் செல்லும் அவளைக் கண்டாள் மற்றோர் இளம் பரத்தை. அம் மகனைப் பெற்ற தந்தையோடு அப்போது உறவுடையாள் அவள். அச்செருக்கால், அம்மகன் தாயை வெறுப்பவள். அவன் தாய், தன் காதலன் மனைவி, அவன் தன்னோடு உறவு கொள்வதைப் பொறாது காய்பவள் என்ற கருத்தால், அவன் தாயொடு பகை கொண்டு வாழ்பவளேனும், அவன் தன் காதலன் பெற்ற கண்மணியாதலின், அவனைத் தன் மனைக்கு அழைத்துச் சென்று, அவனொடு சிறிது நேரம் மகிழ்ந்திருந்து, அவனை அனுப்பினாள். இறுதியில் அவனை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் பணிப்பெண்.

மகனைக் கோயிலுக்கு அனுப்பிய தாய், அவன் நெடிது நேரம் கழியவும் வாரானாகவே வருந்தினாள். வாயிற்கண் சென்று அவன் வருகையை எதிர்நோக்கிக் காத்துக்கிடந்தாள். இறுதியில் அவனோடு வந்து சேர்ந்தாள் ஏவல் மகள். அவள்மீது மாறாச்சினம் கொண்டாள் தாய். “ஏடி! கோயிலுக்குச் சென்று வர இத்தனை நாழிகை ஆகாது. நீ கோயிலுக்கு மட்டும் சென்று வரவில்லை. இவனொடு நீ எங்கெங்கோ சென்று திரிந்து வந்துளாய். அதனாலேயே இத்தனை நாழிகை. இவனைக் கூட்டிச் சென்ற இடம் எதையும் ஒளியாமல் என்னிடம் கூறு,” எனக் கடிந்துரைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/111&oldid=1129759" இலிருந்து மீள்விக்கப்பட்டது