பக்கம்:மருதநில மங்கை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108புலவர் கா. கோவிந்தன்


சில வீடுகளைக் கடந்து வந்ததும், தன் வீட்டின் வாயிற்கண் நின்று, யாரையோ எதிர்பார்த்திருந்த ஓர் இளம்பெண், அம்மகனைப் பார்த்து விட்டாள். அவளும் ஒரு பரத்தையே. அம்மகனைப் பெற்ற இளைஞன் உறவை ஒரு காலத்தே பெற்று, இப்போது இழந்து வருந்தியிருப்பவள். அக்காதல் நோய் அலைக்க அழுது வாழ்பவள். என்றும் அவன் நினைவால் இனைபவள். அவள் தன் காதலன் பெற்ற மகனைத் தன் தெருவில் கண்டதும், பாய்ந்தோடி வந்து ஏந்திக் கொண்டாள். தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். அவன் வாயில் பலமுறை முத்தங் கொண்டாள். மகிழ்ச்சி தாங்கவில்லை. மகனோடு தன் மனையுள் புகுந்தாள். குழந்தைகளுக்கு அணியும் அணி வகைகளுள் சிறந்த பல அணிகளை ஆராய்ந்து எடுத்து அவனுக்கு அணிவித்தாள். திடுமென அவள் சிந்தனையில் ஒரு கலக்கம். “இத்தனையும் செய்கிறோமே, இவனொடு நமக்கு என்ன உறவு? இவனுக்குத் தாயாம் தகுதி எனக்கு ஒருகாலத்தே இருந்தது. அன்று இவன் தந்தை என்னோடு உறவு கொண்டிருந்தான். அவன் இன்று என்னை மறந்துவிட்டான். இந்நிலையில், அவன் பெற்ற இவனொடு எனக்கு உறவு ஏது?” என்று எண்ணி வருந்தினாள். மகன் மாண்புடையனாதல் கண்டு மகிழ்ந்தாள். ஆனால், அவன் தந்தையின் குணம் இவன் பாலும் அமைந்து விடுதல் கூடாதே என்ற எண்ணம் எழ மனங் கலங்கினாள். காலம் கடந்தது. மகனை மீண்டும் எடுத்து முத்தங் கொண்டாள். “மகனே! என் கண்கள் சிவக்க அழுது வருந்துமாறு என்னைக் கைவிட்டுப் போன கொடியோனாய உன் தந்தைபோல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/110&oldid=1129755" இலிருந்து மீள்விக்கப்பட்டது