பக்கம்:மருதநில மங்கை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மருதநில மங்கை 107


பருவம் வாய்க்கப் பெற்ற மகளிர் சிலரோடு கூடி, மணல் வீடு கட்டியும், மரப்பாவைக்கு மனம் செய்தும் விளையாடிக் கொண்டிருந்தாள் ஒருநாள். அவளை அந்நிலையில் கண்டு காதல் கொண்டான் அம்மகனைப் பெற்ற அவ்விளைஞன். அவளை வதுவை அயர்ந்து அவளோடு சிலநாள் மகிழ்ந்து வாழ்ந்தான். பின்னர் அவளையும் கைவிட்டுச் சென்றான். அன்றுமுதல் அவள் அவன் நினைவால் வருந்திக் கிடந்தாள். இவ்வகையால், அம்மகனுக்கு அவளும் ஒரு தாயானாள். அதிலும் முதல் தாயாம் முறைமை உற்றாள். அவள் ஏவல் மகள் ஏந்திச் சென்ற அம்மகனைக் கண்டாள். அவன் பால் அன்பு சுரந்தது. அவனைத் தன் கையில் வாங்கிக் கொண்டாள். அவள் இன்னள் என்பதை, அப்பணிப் பெண் அறிவாளாதலின், மறுக்காது அளித்து அவள் பின் சென்றாள். மகனைப் பெற்ற பரத்தை, வீட்டிற்குச் சென்றாள். அழகிய அணிபல பூட்டிப் பாராட்டினாள். தன் முன்னிறுத்தி, ‘மகனே! நான் கண்டு மகிழச், சிறிதே உன் நகைமுகம் காட்டு!’ என்றாள். அவனும் அவ்வாறே நகைத்து மகிழ்ச்சியூட்டினன். அவனையும், அவன் நகை முகத்தையும் கண்ட அவள் கண்முன், அவன் தந்தையே நேர் வந்து நிற்பதுபோல் தோன்ற, அவன் நினைவால், கயிறு அறுந்து முத்து உதிரும் காட்சிபோல், அவள் கண்கள் நீரைச் சொரிந்தன. மேலும் அம்மகன் ஈங்கு இருந்தால், தன் கவலையும் கண்ணீரும் பெருகும் எனக் கருதினாள். உடனே மகனை எடுத்து, ஏவல் மகள்பால் அளித்து “எடுத்துச் செல்க!” என விடுத்தாள்.

ஏவல் மகள், மகனை எடுத்துக் கொண்டு, வெளியே வந்தாள். தன் மனை நோக்கிச் செல்லத் தொடங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/109&oldid=1129750" இலிருந்து மீள்விக்கப்பட்டது