பக்கம்:மருதநில மங்கை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116புலவர் கா. கோவிந்தன்


கைகளால் செய்யும் சிறு குறும்புகளை, நான் காணச் செய்து என்னைக் களிப்பூட்ட, இன்று இரவு என் இல்லில் தங்கிச் செல்வையோ? நீ அவ்வாறு தங்குவையாயின், என் புது நலம் விரும்பி என்னைக் காதலித்து வந்து, அந் நலத்தை யுண்டு, பின்னர் என்னை மறந்து பிரிந்து வாழும் நாணற்ற நல்லோனாய உன் தந்தையால் நான் உற்ற நோயை மறந்து மகிழ்வேன். ஆகவே, மகனே! என் இல் வந்து வாழ வருக!” எனக்கூறி வழிமறித்து நின்றாள். அவளை மதியாது, அவள் கூறுவனவற்றைக் கேளாது வந்து விடுதல் அம்மகனால் இயலாது போயிற்று. அதனால், அங்குத் தங்கி, அவள் கூறுவன கேட்டுப் புறப்பட்டான். அதனால் சிறிது காலம் கடந்தது.

வீட்டில் மகனை விளையாட அனுப்பிய தாய்க்கு, அவனைக் காணாதிருக்க முடியவில்லை. அவன் வருகையை விரைவில் எதிர் நோக்கினாள். ஆனால் நாழிகை பல கழியவும் அவன் வந்திலன். பலமுறை வெளியே வந்து வீதியை நோக்கினாள். இறுதியில் வாயிற் கதவில் சாய்ந்து அங்கேயே நின்று அவனை எதிர் நோக்கியிருந்தாள். மேலும் மகன் பால் உண்டு நாழிகை பல கழியவே, அவள் மார்பு முலையில் பால் மிகுந்து துன்புறுத்திற்று. இவ்வாறு அவன் வருகையைக் காணாது துடிதுடித்துக் கிடந்தாள். இறுதியில் தேர் வந்து நின்றது. மகனை இறக்கி அழைத்துக் கொண்டு மனையுள் புகுந்தாள் சேடி.

தாய் சேடியைப் பிடித்து நிறுத்தினாள். “ஏடி, நான் வழிமேல் விழி வைத்து வருந்திக் கிடக்கிறேன். நான் இத்தனை நேரம் வாடிவருந்த, நீ வரத் தாமதித்தது ஏன்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/118&oldid=1129783" இலிருந்து மீள்விக்கப்பட்டது