பக்கம்:மருதநில மங்கை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை121


மகனை அழைத்துச் சென்ற சேடி, தாய் கூறியவாறே, கோயில்கட்கு எல்லாம் போய்க் கடவுளரை வணங்கினாள். பின்னர் அவனோடு வீடு திரும்பினாள். அவர்கள் மீண்டு வரும் வழி ஒரு பரத்தையர் தெரு. அத் தெருவில், அவன் தந்தையின் அன்பைப் பெற்ற பரத்தையர் பலர் வாழ்ந்திருந்தனர். அவர்கள், சேடியோடு செல்லும் அவனைக் கண்டனர். அவன் தந்தை ஒரு காலத்தில் தம்மைக் காலித்துத், தம்மோடு வாழ்ந்து, தம் நலத்தை நுகர்ந்துவிட்டு, இப்போது தம்மை அறவே மறந்து கைவிட்டுச் சென்ற கொடியோனாயினும், அவன்பால் அவர் கொண்ட காதல் குறையாமையால், அவன் மகனைக் கண்டவுடனே, அக்காதல் உணர்வு உயிர்பெற்று ஓங்க, அம்மகன்பால் பேராசை கொண்டனர். அவ்வாசை மிகுதியால், தம் வீடுகளை விடுத்து வெளியே ஓடிவந்தனர். அவனைச் சூழ்ந்து நின்று, தந்தை அழகே தன் அழகாகக் கொண்ட அவன் பேரழகைக் கண்டு மகிழ்ந்தனர். பின்னர்த் தாம் அணிந்த அணிகளுள் சிறந்தனவும், அவனுக்கு ஏற்றனவுமாய அணிகளை ஆராய்ந்து, அவனுக்கு அணிவித்து அகம் மகிழ்ந்தனர்.

மகன் சென்று நேரமாகி விட்டது. காலம் கடக்கக் கடக்க அவள் கவலை பெரிதாயிற்று. மேலும் அவன் பால் உண்ணும் நேரமும் போய்விட்டது. பால் தாராமையால், பால் அவள் மார்பில் குடம் போல் கட்டி விட்டது. அதைப் பிறர் பாராவாறு பலமுறை தன் கைகளால் அழுத்தித் தேய்த்து விட்டாள். அப்படியும் அது அடங்கவில்லை. இவ்வாறு வருந்தி, அவள் மகனை எதிர்நோக்கி இருந்தாள். அந்நிலையில், பரத்தையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/123&oldid=1129798" இலிருந்து மீள்விக்கப்பட்டது