பக்கம்:மருதநில மங்கை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122புலவர் கா. கோவிந்தன்


அணிவித்த அணியோடு, அவள் மகன் வந்து சேர்ந்தான். மகனைக் காலங் கடந்து அழைத்து வந்து சேடியைச் சினந்தாள் தாய். “கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வர இத்தனை காலம் வேண்டியதில்லை. கோயிலுக்குச் செல்லும் வழியில், இவள் தந்தை செல்லும் பரத்தையர் வீடுகள் உள என்பதை அறிவேன். நீ இவனை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கே சென்று வந்துளாய். என் கட்டளையை நீ மீறிவிட்டாய். அப்பரத்தையருள் எவள் வீட்டிற்கு இவனைக் கூட்டிச் சென்றாய்? அதை ஒளியாமல் உரை!” எனச் சினந்து வினவினாள்.

தலைவியின் சினங்கண்டு நடுங்கிய சேடி, பரத்தையர் தெருவில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒன்று விடாது உரைத்தாள். தன் மகன், பரத்தையர் அளித்த, அதிலும், தன்பால் அன்பற்றுத் திரியும் தன் கணவன் காதலிக்கும் பரத்தையர் அளித்த அணிபூண்டு வந்துளான் என்பது கேட்டு வெறுப்பும் வேதனையும் கொண்டாள். “பரத்தையர் அளித்த அணி பூண்டு வந்த இவனும் ஒரு மகனா? சீ! இவன் மகன் அல்லன்! வெறுத்து ஒதுக்கத்தக்க வீணன் இவன்!” என்று தனக்குள்ளே கூறிக் கலங்கினாள்.

பின்னர், மகனைப் பிடித்து ஈர்த்துத் தன்முன் நிறத்தினாள். “நாடோடிப் பயலே! நடுத்தெருவில், ஊர்ப் பெண்கள், என்னை எள்ளி நகைக்கும் கருத்தோடு, உன் கைவிரலில் இட்ட மோதிரம் எது? அதை எனக்குக் காட்டு!” என்று கடிந்துரைத்தவாறே, அவன் கைவிரலைப் பற்றி, அதில் அணிந்திருந்த மோதிரத்தை நோக்கினாள். நறுமலரின் அழகிய செவ்விதழ்போல் சிவந்த விரலுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/124&oldid=1129801" இலிருந்து மீள்விக்கப்பட்டது