பக்கம்:மருதநில மங்கை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124புலவர் கா. கோவிந்தன்


திரியும் அவள் உணர்ந்து கொள்ளட்டும், அவள் கணவனைக் காதலிக்கும் தகுதி எனக்கும் உண்டு; அவளுக்கு எந்நிலையிலும் நான் தாழ்வுடையளல்லேன் !’ என்பதைக் கூறாமல் கூறி, என்னை எள்ளி இகழும் கருத்தினாலேயே அவள் இதை இவனுக்கு அணிவித்து என்பால் அனுப்பியுள்ளாள். இதுவும் எனக்கு ஏற்பட்ட ஓர் இழிவு போலும்!’ என்று கூறிக் கலங்கினாள்.

தாயின் சொல்லும் செயலும் கண்டு அஞ்சினான் அவ் இளம் மகன். அஞ்ச வேண்டாத காலத்தே அவன் அஞ்சியது காண அவள் வருந்தினாள். தந்தை செய்த தவறினுக்கு மகனைக் காயும் என் மடமையை என்னென்பேன் எனத் தன்னை நொந்து கொண்டாள். உடனே, அஞ்சி அகன்று நிற்கும் மகனை அருகழைத்து அனைத்துக் கொண்டாள்.

‘மகனே! அஞ்சாதே. குற்றம் செய்தவன் நீ அல்லை. இவ் அணிகளை உனக்குத் தந்த அப்பரத்தையரும் தவறு செய்தவர் அல்லர். தவறு உன் தந்தை உடையதோ என்றால், அதுவுமில்லை. இளவேனிற் காலத்தில், ஆற்றில் தெளிந்தோடும் தண்ணீர் போன்றவன் உன் தந்தை அவன் எல்லோர்க்கும் இனியன். அவன் யாருக்கும் எதை வேண்டுமாயினும் அளிக்கும் உரிமை உடையான். ஆகவே, அப்பரத்தையர்க்கு இத்தொடி அளித்த அவன் செயலும், குற்றம் உடைத்தன்று. ‘இதை இவனுக்கு அளித்தவர் யார்?’ என்று கேட்டு, அதனால் இத்தனையும் அறிந்து, வருந்தும் நானே தவறுடையள். நான் அதைக் கேட்டதே தவறு. ஆகவே, மகனே! அது குறித்து நீ அஞ்சாதே!” என்று கூறி, . அவன் அச்சத்தை அகற்றி அணைத்துக் கொண்டு அழுது கிடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/126&oldid=1129806" இலிருந்து மீள்விக்கப்பட்டது