பக்கம்:மருதநில மங்கை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை129


ஏறும் ஆனேற்றின் உருவம் பொறித்த அணி கிடந்தசையும் அழகிய ஆரம் விளங்கும் கண்டத்தைக் கண்டாள். கடலில் கண்டெடுக்கும் முத்து முதலாம் அரிய மணிகள் பலவும் கலந்து கோக்கப் பெற்ற கவின்மிக்க மாலையும், தேன் உண்டு வாழும் வண்டுகள் வந்து மொய்க்குமாறு புதுப்புது மலர்களால் தொடுக்கப் பெற்ற தலைமாலையை, நிறத்தாலும் வடிவாலும் நிகர்ப்பதும், நீரில் மலரும் நீலம்தானோ எனக் காண்பார் கண்டு மருளுமாறு, அம்மலரின் நிறம் ஊட்டிப் பண்ணியதுமாய நீலமணி மாலையும் விளங்கும் மார்பைக் கண்டாள். இளமையால், தன் இனிய உறுப்பு நலத்தால், இயல்பாகவே அழகனான தன் மகனை, அவ்வணியும், பிறவும் மேலும் அழகனாக்கிக் காட்டும் காட்சியைக் கண்டு களித்தாள்.

அவ்வழகிளம் சிறுவன், தன் சின்னஞ்சிறு கால்கள் சிவக்குமாறு தளர் நடையிட்டுச் சிறுதேர் உருட்டும் இடத்தை அணுகினாள். “என் அருமை மகனே! ஓயாது ஆடித் திரியின் உன் சின்னஞ்சிறு கால்களின் மெல்லிய விரல்கள் வருந்தும். ஆட்டத்தை மறந்து அடிமேல் அடி வைத்து, உன் தேரைப் பைய உருட்டிக் கொண்டே என் பால் வந்து, உனக்கென்று உறுசுவை ஊட்டிக் கொணர்ந்த இப்பாலை உண்டு பசியாறிச் செல்க!” என்பன போலும் இனிய உரைகளைக் கூறிக் கொண்டே, பால் ஊட்டத் தொடங்கினாள்.

பாலும் சுவை மிகுந்துளது. ஊட்டும் காலமும் அவன் பாலுண்ணும் காலம். இன்முகம் காட்டி, இன்னுரை வழங்கி, ஊட்டுகிறாள் தாய். ஆயினும், ஆடல் பால் உள்ள வேட்கை மிகுதியால், அவன் வயிறார

மருதம்–9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/131&oldid=1129893" இலிருந்து மீள்விக்கப்பட்டது