பக்கம்:மருதநில மங்கை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128புலவர் கா. கோவிந்தன்


இனிய உரை பல வழங்கி உண்பிப்பதும் ஆகிய கடமை மேற்கொண்டு காலங் கழித்தாள்.

ஒருநாள், அச்சிறுவன் தெருவில் ஆடிக்கொண்டிருந்தான். பால் உண்டு நெடிது பொழுது ஆகவே, அவனுக்குப் பாலூட்ட விரும்பிய அவன் தாய், பொற் கிண்ணத்தில், தேனும் சீனியும் கலந்த தீம்பால் ஏந்தித் தெருவிற்கு வந்தாள். வந்தவள் மகனின் அழகிய திருக்கோலத்தைக் கண்டாள். பசும்பொன்னை உருக்கி வார்த்து, வளைத்து இரட்டையாகப் பண்ணிய பாதசரம் அணிந்து, நெருப்பில் இட்டு நிறம் ஊட்டிச் செய்த சதங்கை ஒலிக்கும் கால்களின் கவினைக் கண்டாள். பண்ணுவோன், தன் கைத்திறம் எல்லாம் காட்டிப் பண்ணிய பொன்மணிகளை வரிசையாகக் கோத்த மணி வடமும், அம் மணிவடத்தின் மேலே பவழ வடமும் கிடக்க, அவை இரண்டினுக்கும் மேலாக, உள்ளே உள்ள அவற்றின் உருவைப் புறத்தே தெள்ளெனத் தெரிவிக்கும் மெல்லிய பூந்துகில் உடுத்த இடையின் இனிய தோற்றத்தைக் கண்டாள். நண்டின் கண்களை நெருங்க வைத்தாற் போன்ற அறுப்புத் தொழில்கள் அழகாக அமையப் பண்ணிய, பேரொளி வீசும் பொற்றொடி அணிந்த கைகளின் கவினைக் கண்டாள். மழை பெய்த நிலத்தில் ஊர்ந்து திரியும் இந்திர கோபத்தின் அழகிய செந்நிறம் வாய்ந்த இரு பெரும் பவழங்கள் இருபால் கிடக்க, இடையே, இளம் சிறுவர்களை இன்னல் இன்றிக் காப்பீராக!’ என இறைவனை வேண்டும் கருத்தால், அவன் படையாம் வாள் போலவும், மழுப் போலவும் பண்ணிய அணிகள் தொங்க, அவ்விரண்டிற்கும் இடையே, அவ்விறைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/130&oldid=1129816" இலிருந்து மீள்விக்கப்பட்டது