பக்கம்:மருதநில மங்கை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144புலவர் கா. கோவிந்தன்


மாட்டாமையால் கலங்கி, உன்னோடு ஊடி நிற்பவரே, உண்மையில் தவறுடையவராவர். உன்மீது தவறு இல்லை. தவறு நீங்கிய தறுகணாளன் நீ விரும்பிய இடத்திற்குச் செல்லும் உரிமை உடையாய் நீ!” என வெறுத்துக் கூறி வாயடைத்து நின்றாள்.

அவள் தன்னைக் கண்டவுடனே கடிந்து கூறிய சொற்களினும், இப்போது வெறுத்துக் கூறிய இச்சுடு சொற்கள் தன்னைப் பெரிதும் வருத்துவதை உணர்ந்தான்் இளைஞன். வருந்தினானேனும், அந்நிலையிலும் உண்மையை ஒப்புக் கொள்ள இசைந்திலன். அதனால், மனைவியை நோக்கிப், “பெண்ணே ! அணைபோலும் உன் தோளைத் தந்து எனக்கு இன்பம் ஊட்ட வேண்டிய நீ, என்பால் தீய ஒழுக்கம் எதுவும் இல்லையாகவும், தீயோரைத் துன்புறுத்துமாறு, என்னைத் துன்புறுத்துகின்றாய். பெண்னே! என்னைக் கடிந்து ஒதுக்கத்தக்க குற்றம் எதையும் நான் செய்திலேன். இதை நீ நம்பு!” என்று கூறிப் பணிந்து நின்றான்.

மனைவி விரட்டக், கணவன் பணியும் இக் காட்சியைத் தோழி, மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஊடலின் இயல்பை உணர்ந்தவள் அவள். உணவிற்கு உப்புப் போல், கூடலுக்கு இன்றியமையாதது ஊடல். ஆனால் அது சிறிது நீண்டால், உப்பு மிகுந்த உணவுபோல், அக்கூடல் பயனற்றுப் போகும் என்பதை அறிந்தவளாதலின், அவள் ஊடல் அந்த அளவோடு முற்றுப் பெறுதல் வேண்டும் என விரும்பினாள். மேலும் கணவன், பரத்தையர் தொடர்பு கொண்டிருப்பது உண்மையே எனினும், மனைவிபால் கொண்ட அச்ச மிகுதியால், அவன் அதை மறுக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/146&oldid=1130017" இலிருந்து மீள்விக்கப்பட்டது