பக்கம்:மருதநில மங்கை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை145


தவறு செய்த ஒருவர், அதைப் பிறர் அறிந்து கண்டித்தவழி, அத்தவறினைத் தாம் செய்யவில்லை என மறுப்பராயின், அவரை மன்னித்து விடுதல் மக்கட் பண்பாகும். ஆகவே, தவறு செய்திலேன் எனக் கூறும் கணவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்றும் அறிந்தாள். அதனால் விரைந்து தன் தோழிபால் சென்றாள். “தோழி! இதோ நிற்கும் உன் கணவன், மான்விழி போலும் நின் அழகிய கண்கள், கண்ணீர் வடித்துக் கலங்கி அழ அழ, உன்னைப் பிரிந்தவன்தான். பிரிந்து அப்பிரிவுத் துயரால் உன்னை வருத்தியவள்தான். ஆயினும், செய்த அத்தவறிலேயே ஆழ்ந்து விடாது ஈண்டு மீண்டு வந்துளன். அம்மட்டோ! மானத்தை விட்டு உன்னை வணங்கி நிற்கின்றான். இவனோடு இனியும் ஊடிநிற்பது உன் பெருமைக்கு ஏற்குமோ?” என்று ஏற்பக் கூறினாள்.

தோழி கூறியன கேட்டாள் அப் பெண். தோழி அறிவுடையவள், தன் நலத்தில் கருத்துடையவள் என்பதை அவள் அறிவாள். அதனால் ஊடுதல் இனிக்கூடாது எனத் தோழி உரைத்ததற்கு உடன்பட்டாள். ஆயினும் அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ள நாணம் மிக்க அவள் நல்லுள்ளம் தயங்கிற்று. அதனால், “நெஞ்சே! நம்மை உயர்வாகக் கருதி, நம் நலம் ஒன்றே குறித்துக் கூறும் எதையும் இனியும் கூறுதல் ஏலாது எனத் தோழி கூறி விட்டாள். தகுதி மிக்க தோழியின் அவ் அறிவுரையினை நீ ஏற்றுக் கொள்வாயாக. இதுகாறும் நீர் அறாது, நித்திரை கொள்ளாது வருந்திய கண்கள், இனியேனும் உறக்கம் கொண்டு உய்யுமாக!” எனத் தன் நெஞ்சை நோக்கிக் கூறுவாள் போல் கூறி, ஊடல் தணிந்து அவனை ஏற்றுக் கொண்டாள்.

மருதம்-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/147&oldid=1130018" இலிருந்து மீள்விக்கப்பட்டது