பக்கம்:மருதநில மங்கை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை155


ஒதுக்காதே. நீயே ஆராய்ந்து கூறு!” என அன்பு தோன்றக் கூறி, அவள் முகம் நோக்கி நின்றான்.

அது கேட்ட அவள், “ஏடா! காட்டில் கோயில் கொண்டிருக்கும் வெற்றிக் கடவுளாம் கொற்றவை, எல்லாம் அறிந்தவள். அவ்வாறாகவும், அவள் ஏதும் அறியாதாள் என எண்ணி, அவளை அடுத்து வாழும் சில பேய்கள், அவளுக்கு நிகழ இருக்கும் சில நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறத் துணிந்ததாக ஒரு கதை உண்டு. ஏடா! உன் செயலும் அது போன்றுளது. வஞ்சம் கலந்த உன் பொய்யுரைகளை என்பால் உரைத்து என்னை ஏமாற்ற எண்ணாதே. உன் கொடுமைகளை நான் நன்கு அறிவேன்!” என்று கூறி அவனை மடக்கினாள்.

மனைவியின் மனத்தை மாற்றி மகிழ்விப்பது ஏலாது என்பதை அறிந்து கொண்டான் இளைஞன். ஆயினும், தன்பால் தவறில்லை எனக் கூறுவதையோ, அவள் மனத்தை மாற்ற முயற்சிப்பதையோ அவன் கை விட்டிலன். அதனால் அவளை அணுகியிருந்து, “பெண்ணே! அரசன் ஒருவன், தன் ஆட்சிக்கீழ் வாழ்வான் ஒருவனைச் சினந்து சீரழிக்கிறான் என்றால், அக்குடிமகன் குற்றம் உடையவன் என்பது பொருளன்று. குடிமகன் மீது குற்றம் இல்லாத போதும், கோமகன் அவனைக் கோபிப்பான். அதுவே நம் நிலையும். நீ என்னைச் சினக்கின்றாய். அதனால் என்பால் தவறு உளது என்பது கருத்தன்று. என்பால் தவறு இல்லை யாகவும் நீ சினக்கின்றாய். இனியவளே! நான் தவறுடையேனல்லேன்!” எனக் கூறி அவள் கோபத்தைத் தணிக்க முயன்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/157&oldid=1130030" இலிருந்து மீள்விக்கப்பட்டது