பக்கம்:மருதநில மங்கை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162புலவர் கா. கோவிந்தன்


நிகழ்ச்சிகள், இரவில் நீ கண்ட கனவு நிகழ்ச்சி போலும்!” என்று கூறி, அவளை மறுவலும் ஏமாற்ற எண்ணினான்.

ஆனால், அது அன்று பயனற்றுப் போயிற்று. பண்டெல்லாம், அவள், அவன் ஒழுக்கக் கேட்டை அறியாமையால், அவன் ஆணையிட்டுக் கூறுவனவற்றை நம்பி, அவனை ஏற்றுக் கொள்வாள். ஆனால் இன்று அவன் வஞ்சத்தை நேர் நின்று கண்டு விட்டமையால், அவன் கூறுவனவற்றை ஏற்றுக் கொள்ளாது, “ஏடா! ‘கருத்துத் திரண்ட மேகம், பெருமழை பெய்யும் இரவின் நடு யாமத்தில், காதலன் வரக் குறித்த இடத்திற்கு வந்து நின்ற காதலி ஒருத்தியை நீ கண்ட நினைவின் விளைவால் வந்த கனவாகும், நீ கூறும் அந் நிகழ்ச்சி!’ எனக்கூறி, உன் ஒழுக்கக் கேட்டை ஒப்புக் கொள்ளாது நிற்கின்றாய். உன்நிலையை உள்ளவாறு உணர்ந்து கொண்டேனாதலின் நீ இன்று உரைக்கும் ஆணை, பண்டைய ஆணைகள் போல், என் அறிவை மயக்கி உனக்குப் பயனளிக்காது. ஆகவே, ஏற்காதன கூறி ஈண்டு நிற்காதே. நீ விரும்பிப் புகும் வீடுகள் பல உள. ஆண்டுச் செல்” எனக்கூறி, அவன் கூற்றை மறுத்தாள்.

இளைஞன், மனைவியைப் பொய்கூறி ஏமாற்றுதல். இயலாது, என்பதைக் கண்டு கொண்டான். அதனால், அவள் அழகைப் பாராட்டி, அவ்வழகு நுகரப் பெறாது பாழாவதை எடுத்துக் காட்டிப், பணிவும், அன்பும் பொருந்திய சொற்களால், “பெண்ணே! என்னை ஆட்கொண்டு, உன் அழகை நான் பருக எனக்கு அருள், புரிவாயாக. அதை நுகரத் துடிக்கிறது என் நெஞ்சம்!” எனக் கூறி, அவள் முகம் நோக்கி நின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/164&oldid=1130069" இலிருந்து மீள்விக்கப்பட்டது