பக்கம்:மருதநில மங்கை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை15


நடுங்குவர். ஆதலின், பரத்தையர் பின் திரியும் மன்னவன், மக்கட் பண்பற்றவனாவன். அறமல்லாச் செயல் செய்ய நானும் நல்உள்ளம் உடையார், பெரியோர் பழிக்கும் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொள்ளார். ஆதலின், அத்தீயொழுக்க நெறி நிற்கும் அரசன், நாணம் அழிய நயமற்ற வனாவன்!” எனப் பலப்பல எண்ணி வருந்தினாள்.

பலரும் பழிக்கும் பரத்தையர் தொடர்பு மேற் கொண்ட அரசன், அதைப் பிறர் அறியாவாறு மறைத்து மேற்கொள்ளவும் கருதினானல்லன். பரத்தையொடு கூடி, ஆடியும் பாடியும் மகிழுங்கால், அப்பரத்தை பொய்க் கோபங் கொண்டு, மலர் மாலையால் அவனை அடிக்க, அதனால், அவன் மேனியில் உண்டான புண்ணின் வடுவைப் பிறர் பார்த்துப் பழிக்க வாழ்ந்தான். பரத்தையை அன்பால் அணைத்துக் கொண்ட பொழுது, தன் மார்பிற் பூசிய சந்தனம், அவள் ஆகம்பட்டு அழியப் பிறர்முன் அழிந்த அக்காட்சியோடே நாணாது போவன். பரத்தையின் வாயில் முத்தம் கொண்டவழி, அவள் இளம் பற்கள் அழுந்தியதால் சிவந்து உண்டான வடு விளங்க வருதல் நாணற்ற செயலாம் என அவன் நினைப்பதிலன். பழிக்கத் தகும் அச் சின்னங்கள் சிதையாமல் வாழும் அவன், ஒரோவொருகால், தன் மனைக்கு வரும் பொழுதும், அத் தோற்றத்தோடே வருவன். மணம் கொண்ட மனைவியின் முன் அவ் வடிவோடு வருதல் மானம் இழந்தார்க்கும் ஒவ்வாது என்பதை அவன் உணர்ந்திலன்.

கடையரும் செய்ய அஞ்சும் அச் செயலைக் கணவன் மேற்கொள்வது கண்டு கலங்கினாள் மனைவி. ‘அவன் என் மனை வரின், அவனை ஏற்றுக் கொள்ளேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/17&oldid=1129374" இலிருந்து மீள்விக்கப்பட்டது