பக்கம்:மருதநில மங்கை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை171


உறக்கத்தினிடையே கண்ட அக்கனவு, மிகவும் அழகுவாய்ந்த ஓரின்பக் கனவாகும். உலகில் காதலனும் காதலியும் ஒருகால் கூடினால், ஒருகால் ஊடுவர். உயர்ந்த பொருளை விரும்புவார் ஓயாது உழைத்தல் வேண்டும். ஆன்றோர் உலக இன்ப வாழ்வை வேண்டுவார். அரிய பல தவம் ஆற்றியே அடைவர். பெண்ணே! இந்தக் கட்டுப்பாடும் தடையும் கனவிற்கு இல்லை. கனவில் காதலனும் காதலியும் பிரிவறியாது பேரின்பம் நுகர்கின்றனர். பொருள் தேடிப் போகாது ஊக்கம் குன்றி இருப்பவரும் பெரும் பொருள் பெற்றுச் சிறந்துவாழ்கின்றனர். ஆன்றோர் உலக வாழ்வு, அரிய முயற்சி இல்லாமல் அனைவர்க்கும் கிடைக்கிறது. உலகியல் நெறிக்கு மாறுபட்ட இந்நிகழ்ச்சிகளோடு, காதலனும் காதலியும் கூடுதலும் ஊடுதலுமாகிய உலகில் நிகழ்ச்சிகளும் அக்கனவில் உள. ஆகவே, பெண்ணே! அக்கனவு நனிமிக இன்பம் உடைத்து!” என்று கூறினான்.

கனவின் இயல்பை இவ்வாறு கூறி அவன் பாராட்ட, அவள் அதை அமைதியாக இருந்து கேட்டாள். அதனால் அவள் சினம் சிறிதே தணிந்திருப்பது கண்ட இளைஞன், நறுமணம் நாறும் அவள் நெற்றியின் அழகைப் பாராட்டிய பின்னர், “பெண்ணே அரசியல் அலுவற் சிறப்பாலும், வாணிப வளத்தாலும் இரவு பகல் எப்பொழுதும் ஒலி அடங்காத நம் நான்மாடக்கூடலின், வரைபோல் உயர்ந்த நீண்ட மதிலைச் சூழ்ந்து ஓடும் வையையாற்றின் கரைக்கண் இருந்த ஒரு பூஞ்சோலைக்கு நண்பகற் காலத்தில் நல்ல நினைவோடு செல்பவன் போல், நேற்று இரவு கண்ட கனவில் சென்றேன்!” எனத் தொடங்கி மேற்கொண்டு தோடர முற்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/173&oldid=1130136" இலிருந்து மீள்விக்கப்பட்டது