பக்கம்:மருதநில மங்கை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை175


ஒருத்தியின் காதிற் கிடந்தசையும் மாண்பு மிக்க மகரக் குழை மாட்டிக் கொண்டது. ஒருத்தியின் ஆடையை வேறொருத்தியின் காற்சிலம்பில் சுறாமீன் வடிவுபோல் பண்ணிய மூட்டு வாய்கள் தொடக்கி ஈர்த்தன. இருவரும் விழ்ந்தனர். கணவனோடு ஊடிக் கூடாதிருந்த ஒருத்தி, வண்டுகளின் வருகை கண்டு வெருவி, விரைந்து ஓடிக், கணவனை அடைந்து அவன் மார்பை இறுக அணைத்துக் கொண்டு, ஊடல் மறந்து கூடினாள்.

“ஒருத்தி, இடையினின்றும் நழுவி அடியிலே தாழ்ந்த ஆடையை ஒரு கையாலும், முடி நெகிழ்ந்து குலைந்து வீழும் கூந்தலை ஒரு கையாலும் பற்றிக் கொண்டே ஓடி அச்சம் மிகுதியால் இடைவழியில் இருக்கும் குளத்தை அறியாது, அதில் வீழ்ந்து வருந்தினாள்.

“ஒருத்தி, வந்து மொய்க்கும் வண்டுகளைக் கைகளால் ஓட்டிப் பார்த்தாள். கைகள் ஓய்ந்தனவே யல்லாது, வண்டுகள் ஓடவில்லை. மார்பில் அணிந்த மாலையைப் பறித்து ஓட்டினாள். அப்போதும் அவை அகலவில்லை. அவற்றை ஓட்டும் வகையறியாது நாற்புறம் நோக்கினாள். அருகே, நீர்நிலையில் ஓடம் ஒன்று மிதந்து கிடப்பதைக் கண்டாள். உடனே அதில் பாய்ந்து, உந்தி ஓட்டினாள்.

“ஒருத்தி அளவிற்கு மீறிக் குடித்திருந்தாள். அதனால் கண் திறந்து நோக்குவதும் அவளால் இயலாது போயிற்று. ஆயினும் வண்டுகள் மொய்த்து வருத்துவதை உணர்ந்தாள். தன் இரு கைகளையும் ஓங்கி அவற்றை ஓட்ட முற்பட்டாள். ஆனால், கண் திறந்து பார்க்க மாட்டாமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/177&oldid=1130140" இலிருந்து மீள்விக்கப்பட்டது