பக்கம்:மருதநில மங்கை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை195


குறளன் நடை கண்டு மகிழ்ந்தாள் கூனி, கூனி, தன்மீது கொண்ட கோபத்தை மறந்தாள் என்பதை அறிந்து கொண்ட குறளன். உடனே அவளை அணுகி, “அன்பே! இனி உன்னை இகழ்ந்து கூறேன். இது உறுதி. அரசன் மீது ஆணை. இனி நம் பகை மறந்து மகிழ்ந்து வாழ்வோமாக. நாம் ஒருவரை யொருவர் தொட்டுக் கூடி மகிழ்தற்கேற்ற குறியிடம் எது என்பதை ஆராய்ந்து கூறுவாயாக!” என்று கூறி வேண்டி நின்றான்.

குறளன், தன் பிழை உணர்ந்து, சூளுரைத்து அடங்கவே, அவளுக்கும், அவன் மீது ஆராக் காதல் பிறந்தது. அதனால், அவன் மார்பு பண்டுபோலாது, மென்மையும் இனிமையும் வாய்ந்ததாகப் புலப்பட்டது. அவன் மார்பின் மாண்பைப் பாராட்டிவிட்டு, “அன்ப! உன்னை இகழ்வதை நானும் கைவிட்டேன். நீ விரும்பிய வாறே, இனிக் கூடி வாழ்வோம். ஆனால், அதற்கு இது ஏற்ற இடமன்று. நம்மைக் காணும் இவ்வரண்மனை வாழ்வார், “பேயும் பேயும் கூடிய காட்சிபோல் இக்கூனும் குறளும் கலந்த காட்சியைக் காண்மின்!” எனக் கூறி நகைப்பர். அவ்வாறு நகைத்தலை நான் பொறேன். ஆகவே, பொற்றகடு போலும் பேரழகு மிக்க உருவத்தாய்! அரண்மனைக்கு அப்பால், அயலார் புகாத ஒரு பூஞ்சோலை உளது. ஆண்டு வருக, ஆங்கு, ஆன்றோர்கள் தம் அரிய ஓலைச்சுவடியின் தலையைக் கட்டி, அதன்மீது இட்ட அரக்கிலச்சினை போல், ஆரத்தழுவி அகம் மகிழ்வோமாக!” என்று இனிக்கக் கூறி இசைந்து சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/197&oldid=1130169" இலிருந்து மீள்விக்கப்பட்டது