பக்கம்:மருதநில மங்கை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216புலவர் கா. கோவிந்தன்


சென்றாள். ஆனால் அங்கு அவனைக் கண்டிலள். தன்னை ஆங்குவரப் பணித்து, அவன் அவன் வீட்டிற்குச் சென்றிருப்பான் எனக் கருதினாள். கடுஞ்சினம் கொண்டாள். பொழுது புலர்க என வீடடைந்தாள். பொழுதும் புலர்ந்தது. புறப்பட்டு அவன் வீட்டிற்குச் சென்றாள். தெருவில் இருந்தவாறே வன்சொல் பல வழங்கிப் பழித்து மீண்டாள். அவள் செயல், அவன் சென்று வாழும் இடம் இது, அவன் மேற்கொண்டிருக்கும் ஒழுக்கம் இத்தகைத்து என்பதை அவன் மனைவிக்கு உணர்த்திவிட்டது. அதனால், அவள் வருந்திக் கிடந்தாள்.

அந்நிலையில் அவனும் வந்து சேர்ந்தான். வந்து ஏதும் அறியாதவன்போல் நடந்து கொள்ளும் கணவனைக் கண் கலங்க நின்று வரவேற்று, “அன்ப! என்னையும், பரத்தையையும் ஒன்றாக மதிக்கும் உன் செயல் கண்டு வருந்துகிறேன். அவ்வாறு இழிநிலையுற்றும் உயிர் வாழும் இவ்வாழ்வை வெறுக்கிறது என் தூய உள்ளம். இன்று மட்டுமன்று. என்றுமே, நீ இழிசெயல் உடையையாதல் உணர்ந்து உறுதுயர் கொள்கிறது என் உள்ளம் !” என்று கூறி வருந்தினாள்.

மனைவியின் அத்துயர் நிலையிலும், அவள் முத்துப் பல் காட்டும் முறுவலையும், முழுமதிக்கு ஒத்த முகத்தையும் கண்டு மகிழ்ந்த இளைஞன், அவற்றைப் பாராட்டி விட்டு, அவளை நோக்கிப், “பெண்ணே! என் வலையுள் இன்று, அறிவு நிறைந்த ஒரு யானை வந்தகப்பட்டது. அதைக் கண்டு மகிழும் நினைவால் உன்னை மறந்து விட்டேன். ஆதலின், என்னைச் சினவாது ஏற்றுக் கொள்க!” என்று இரங்கிக் கூறி வேண்டிக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/218&oldid=1130241" இலிருந்து மீள்விக்கப்பட்டது