பக்கம்:மருதநில மங்கை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை237


இழுக்கினான். அவன் ஆட்சி நலத்தால், அவன் நாட்டு மக்கள் மகிழ்ந்தனரேனும், அவன் ஒழுக்கக் கேட்டால், அவன் மனைவி வருந்தினாள். அவன் வாய்மை வழுவாதவன் என உலகம் புகழ்வதைக் கேட்டவள் அவள். அதனால், ‘உன்னைப் பிரியேன்!’ என உரைத்த அவன் சொல்லை நம்பி, அவனை மணந்தாள். இன்று, அவன் பரத்தையர் ஒழுக்கத்தால் தன்னைப் பிரிந்து, தான் உரைத்த உறுதிமொழியை அழித்துவிட்டது காண அவள் வருத்தம் மிகுந்தது. மலர் போன்ற அவள் கண்கள், மழைபோல் நீர் சொரியக் கலங்கினாள். ‘அவன் ஒரு கொடையாளன். தன்னை வந்தடைந்தாரை வாழ்விக்கும் வள்ளல் !’ என உலகோர் அவனைப் புகழ்வதைக் கேட்டவள் அவள். அதனால், அவன் மார்பு தனக்குப் பேரின்பம் நல்கும் என எதிர்நோக்கி அவனை மணந்தாள். இன்று, அவன் பரத்தையர் தொடர்பு கொண்டுவிட்டமையால், அம்மார்பு, தனக்கு இன்பம் அளிக்க மறுப்பது காண, அவள் மனக் கலக்கம் பெரிதாயிற்று. மனக்கவலை அவள் உடல் நலத்தைக் கெடுத்தது, கைவளைகள் தாமே கழன்றோடுமளவு, அவள் தோள்கள் தளர்ந்தன. ‘தம் உரிமை பறிபோகக் கண்டு, வருந்தி வந்து குறைகூறி நிற்பார்க்கு, முறை வழங்கும் செங்கோலன்!’ எனச் சிறந்த பெரியோர்கள் பலரும், அவனைப் புகழ்ந்துரைத்தல் கேட்டு, அவனைக் காதலித்தாள். இன்று, அவன், அவன் பிரிவால் வருந்தும் தன் துயரைப் போக்காமையோடு, அவ் வருத்தத்திற்கு அவனே காரணமாதலும் கண்டு கலங்கினாள். கலங்கிக் கண்ணீர் விட்டு அழுது அழுது, அவள் முகம் ஒளி இழந்து கெட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/239&oldid=1130264" இலிருந்து மீள்விக்கப்பட்டது