பக்கம்:மருதநில மங்கை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236புலவர் கா. கோவிந்தன்


பொருளல்லது பொய்ப் பொருளைக் கூறி அறியாக் சிவ பரம்பொருள் போல், அவன் எவரிடத்தும், எக்காலத்தும், மெய்யே பேசுவன். பொய் பேசி அறியான், இவ்வியல்புண்மையை ஐயமற உணர்ந்த உலகப் பெரியார்கள், அவனைப் போற்றிப் புகழ்ந்தனர். வரையாது வழங்கும் வள்ளன்மைக் குணம் வாய்க்கப் பெற்றவன் அவன். கடல் நீர் உண்டு கருத்து, உண்ட அந்நீரைத் தப்பாது பெய்து உலகத்து உயிர்களை உய்விக்கும் மேகம்போல், தன்னைச் சுற்றி வாழ்ந்து தன் அருள் வேண்டி நிற்பார்க்கு இல்லை எனக் கூறியறியாது, தான் ஈட்டிய பெரும் பொருளை, அவர் அனைவர்க்கும் வாரி வாரி வழங்கும் அவனை, உலகம் வாயார வாழ்த்திற்று. செங்கோல் நெறி நிற்கும் செம்மையுள்ளம் அவன் உள்ளம். ‘இவர் வேண்டாதார். ஆகவே, இவரை, இவர் வாழ்நாள் முடியா முன்பே, அழித்துக் கொணர்க. இவர் வேண்டியவர். ஆகவே, இவர் வாழ்நாள் முடியினும், மேலும் சிலநாள் வாழவிடுக!’ என்று கருதாது, விருப்பு வெறுப்பு அற்று, அவரவர்க்கு வகுத்த வாழ்நாளிற் கேற்ப, அவர் உயிரைக் கைப்பற்றிக் கடமை நெறி நிற்கும் காலக் கடவுள்போல், தன் ஆட்சிக்கீழ் வாழ்வார் அனைவரையும் ஒப்ப மதித்து, அவரவர் தம் குற்றம் குணங்களுக்கு ஏற்ப, அவர்களை ஒறுத்தும், ஒறுக்காது விடுத்தும் நல்லாட்சி மேற்கொண்ட அவனை, உலகம் நாவார வாழ்த்திற்று.

புல்லிதழ் பூவிற்கும் உண்டு. ஆண்மை, அருள் வாய்மை, வள்ளன்மை, நடுவு நிலைமை முதலாம் நல்ல இயல்புகளின் நிலைக்களமாய் நின்று நாடாண்டிருந்த அவனும், பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/238&oldid=1130263" இலிருந்து மீள்விக்கப்பட்டது