பக்கம்:மருதநில மங்கை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30புலவர் கா. கோவிந்தன்


உணர்த்தும் வழியில் வாழக் கருதாது, தன்னை விரும்புவார் உள்ளங்கள் உணர்த்தும் வழிகளிலெல்லாம் சென்று திரியும் செந்நெறி இழந்தவள். அவள்பால் இக் குறைபாடுகள் இருக்கக் கண்டேனாதலின், அவளை அப்பொழுதே மறந்து விட்டேன். ஆகவே, பழியுடையன் என என்னை வெறுத்துத் தள்ளாது, ஏற்றுக் கொள்வாயாக!” எனக் கூறி இரந்து வேண்டினான்.

கணவன் வாய் அவ்வாறு கூறினும், அவன் உள்ளம், தன் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டோடி மறைந்துவிட்ட அப் பரத்தையை அடைதல் வேண்டும் என்ற ஆசையால் நிறைந்து அழிகிறது என்பதை அவன் முகக் குறிப்பால் அறிந்து கொண்டாள் அவன் மனைவி. அதனால், அவன் ஒழுக்கக் கேட்டினை எடுத்துக் காட்டி இடித்துரைக்கத் துணிந்தாள். “இளைஞ! நீ என்னை அந்தணர் ஓம்பிய செந்தழல் முன் கைப்பிடித்து மணங் கொண்டாய் எனினும், உன் மணவினைக்கு அவ்வழலைச் சான்றாகக் கொண்டிலை போலும். அதனால் மணந்து கொண்ட மனைவியாம் என்னை மறக்காது காக்கும் கடமையை நீ கருதுகின்றிலை!” என எடுத்துரைக்க விரும்பினாள். விரும்பிய கருத்தை விளங்க உரைக்காது, ‘ஐய! உன் புறநகர்ப் பொய்கைவாழ் அன்னச் சேவலுக்குத் தாமரை மலரைத் தன் காதல் சான்றாகக் கொள்ளும் கருத்தில்லையாகவும், அது மணமகன் மணமகளைக் கைப்பிடித்து, மணச் சான்றாகத் தன்முன் கிடக்கும் செந்தழலை வலம் வருதல் போல், தன் பேட்டினைக் கூட்டிக் கொண்டு, தாமரை மலரைச் சுற்றித் திரிகிறது. அவ்வழகிய வளம்மிக்க ஊரின் தலைவன் நீ!” என அவன் ஊர் வளத்தில், அவன் ஒழுக்கக் கேட்டினை உட்புகுத்தி உரைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/32&oldid=1129438" இலிருந்து மீள்விக்கப்பட்டது