பக்கம்:மருதநில மங்கை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை31


இவ்வாறு மறைத்து மொழி கிளவியால் அவனைப் பழித்தவள், அவனை நோக்கி, “ஐய! உன் உள்ளம் பரத்தை பின் ஓடுகிறது. அவளைக் காணாது கலங்குகிறது. அவளோடு ஆடிப்பாடி மகிழ விரைகிறது. உண்மை இதுவாகவும், 'பண்பற்றவள் அப் பரத்தை. ஆகவே, அவள்பால் பற்றுக் கொண்டிலேன்!’ எனக் கூறிப் பொய்யுரைத்தல் ஏனோ உன் செல்வச் செருக்கால், உன் ஆட்சி ஆணவத்தால் இவ்வாறு பயனற்ற சொற்களைச் சொல்லிப் பிழை மறைக்கப் பார்த்தல் பண்பாமோ? என் அன்பிற்குப் பணிந்தாய் போல் பொய் நடிப்புக் கொள்ளுதல் பொருந்துமோ? அன்ப! நீ காட்டும் இவ் அன்பு, பொய்யானது என்பதை அறிவேன். ஆதலின், அதுகண்டு என் மனம் மகிழாது. இவ்வாறு என்பால் அன்பு கொண்டாய் போல் வந்து, பணிந்து நின்று, நின் தகுதிக்கு மாறாகப் பொய்யுரைத்து வாழ்தலைக் கைவிடுக. நான் நின்பால் வேண்டுவது ஒன்றே. அதை மட்டும் மறவாது செய்க. உன் மனம் விரும்பும் மகளிரைப் பெற்று மகிழ்ந்து வாழ்க. அவ்வாறு வாழ்ந்து அவர்பால் கொண்ட பற்று அற்றவிடத்து, மனங்கொண்ட மனைவியொருத்தி உளள் என என்னை மறவாது நினைத்துக் கொள்வாயாக அஃது ஒன்றே எனக்கு ஆறுதலாம்!” எனக் கூறி வருந்தினாள்.

“போதுஅவிழ் பனிப்பொய்கைப் புதுவது தளைவிட்ட
தாதுசூழ் தாமரைத் தனிமலர்ப் புறம்சேர்பு,
காதல்கொள் வதுவைநாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர்கொள் மான்நோக்கின் மடந்தை தன்துணையாக

ஓதுடை அந்தணன் எரிவலம் செய்வான்போல் 5
ஆய்துவி அன்னம், தன் அணிநடைப் பெடையொடு,
மேதகத் திரிதரூஉம் மிகுபுனல் நல்ஊர!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/33&oldid=1129440" இலிருந்து மீள்விக்கப்பட்டது