பக்கம்:மருதநில மங்கை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை85


அடைந்தன. ஆனால் கணவன் சென்று வாழும் பரத்தையர் சேரி, நம் நகரினும் நனிமிக இழிவுடைத்து, நல்லோர் நணுக அஞ்சும் பொல்லாங்கு நிறைந்தது. அதை அறிந்தும் கணவன் அங்கு சென்று வாழ்கிறான். வண்டுகள் வாழும் இடத்தை விட்டு வந்தும், அவ்விடத்தை மறக்கவில்லை. கணவன் என்னைக் கனவிலும் கருதுவதில்லை. வண்டுகளை வருக என அழைப்பார் எவரும் அப் பொய்கையில் இல்லை. எனினும், அவை அவ்விடத்தை மீண்டும் அடைந்தன. கணவன் வருகைக்காக, இரவு பகலாகக் காத்துக் கிடக்கிறேன் நான். ஆயினும் அவன் வந்திலன். வாழும் இடத்தில் இவ்வண்டுகள் வைத்திருக்கும் பாசமும், மணந்த மனைவியாகிய என்னிடத்தில், என் கணவனுக்கு இல்லையே!” என்ற எண்ணங்கள் அலை அலையாய் எழுந்து அலைக்க, வருந்தி, வீடு வந்து சேர்ந்தாள்.

அவள் வந்து சேர்ந்த சிறிது பொழுதிற்கெல்லாம், பரத்தை வீடு சென்றிருந்த கணவனும் வந்து சேர்ந்தான். வந்தவனை வரவேற்க விரும்பி, அவனை அணுகினாள். ஆங்கு அவள் கண்ட கோலம், அவள் உள்ளத்தை வாட்டியது. அவன் தலை மாலையில் பிணைந்துள்ள மலர்கள், தம் நிறங் கெட்டு உருவிழந்து நலுங்கிப் போயிருந்தன. அவன் மார்பில், மகளிரைப் புணர்ந்தமையால் பெற்ற புதுமணம் வீசிற்று. அவன் மேனியில், அவனைப் புணர்ந்த மகளிரின் கைவளை அழுந்தியதால் உண்டான தழும்புகள் ஆங்காங்கே காட்சி அளித்தன. பரத்தையரை அண்மையில் புணர்ந்து வருகிறான் என்பதை அவை காட்டி விட்டன. அதனால் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/87&oldid=1129648" இலிருந்து மீள்விக்கப்பட்டது