பக்கம்:மருதநில மங்கை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86புலவர் கா. கோவிந்தன்


உள்ளத்தில், பரத்தையார்பால் கொண்ட பாசம், இன்னமும் வற்றாமலே உளது என்பதை உணர்ந்தாள். அதனால் அவள் அன்பு மாறிற்று. ஆறாச்சினம் மிகுந்தது. வந்தவன் தன்மீது அன்பு கொண்டு வந்திலன் எனக் கருதினாள். வரவேற்கச் சென்றவள், வழியை அடைத்துக் கொண்டு நின்றவாறே, “அன்ப! நாம் பிரிந்தால் பாழ்படும் பேரழகு, நாம் வந்ததும், மீண்டு விடும் இவளுக்கென ஒரு தனி இயல்பு இல்லை. நம் இயல்பிற்கேற்ப இயல்பவள் இவள்! எனும் நெஞ்சத் துணிவாலன்றோ, பரத்தையிற் புணர்ச்சியால் பாழன கண்ணியோடு என் கண்ணெதிர் வந்து நிற்கின்றாய்? ஞாயிறு தோன்ற மலர்ந்து, அது மறையக் கூம்பும் தாமரை மலர் போன்றவள் இவள். நான் பிரியப் பிரியும் இவள் நலம், நான் வந்து கூடக் கூடிவிடும்! எனும் கருத்துடைமையாலன்றோ, அம்மகளிரின் கூந்தல் மலரின் மணம் நாறும் மார்போடு என் முன் வந்து நிற்கத் துணிந்தாய்? ‘மழை பெய்தால் வளம் பெற்று, அது பொய்த்தால் வாடும் பயிர் போன்றவள் இவள். நான் பிரிந்தால் வாடும் இவள், நான் வந்து புணர்ந்தால் பொலிவுறுவள்!’ என்ற எண்ணத் துணிவாலன்றோ, அம் மகளிர் வளையல் அழுந்திப் பண்ணிய வடுவோடு இவண் வந்து நிற்கிறாய்?” எனச் சினந்து கூறிக் கண்டித்தாள்.

சில நாழிகை அமைதியாய் இருந்தாள். பின்னர் மீண்டும் தொடங்கினாள்: “அன்ப ! உன் கருத்தும் செய்கையும் வியத்தற்குரிய, நீ விரும்பும் பரத்தையரும், உன்னை விரும்பும் பரத்தையரும் உன் பிரிவால் வருந்தி வாடுமாறு ஈங்கு வாரற்க அவர் மகிழ ஆண்டே செல்க, இயல்பாக மலராது, கையால் மலர்த்தி மலர்வித்த மலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/88&oldid=1129649" இலிருந்து மீள்விக்கப்பட்டது