பக்கம்:மருதநில மங்கை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90புலவர் கா. கோவிந்தன்


அழகிய பரத்தையையும், அவள் தலைக் கோலத்தில் பிணிக்கப் பெற்று, அவள் நெற்றியில் வந்து தாழும் வயந்தகம் எனும் அணியால், அவள் அழகு, முன்னினும் அதிகமாகித் தோன்றுவதையும் கண்டு களித்திருப்பான் எனக் கருதிக் கலங்கினாள். அந்நிலையே, தன்னை அணுகும் உயிர்களைத் தன் முட்களால் ஊறு செய்யும் தாமரை போல், தன்னை அடைந்தாரைத் தன் காதல் கொடுமையால் துன்புறுத்தும் இயல்புடையான் என்பதை அறிந்தும், அவனையும் தன் வயத்தனாக்கிக் கொண்டு அவனுக்கு அழகு செய்து கிடப்பாளும் ஒருத்தி உள்ளனளே என அவன் விரும்பும் பரத்தையை நினைத்து வருந்தினாள்.

அந்நினைவு அலைக்க, மேலும் அங்கு நில்லாது. தன் வீடடைந்தாள். அவள் மகன், தெருவில் நடைதேர் உருட்டி ஆடிக் கொண்டிருந்தான். அந்நிலையில், மார்பில் மணம் நாறும் சந்தனம் பூசி, கழுத்தில் முத்தாரம் அணிந்து, தலையில் பன்னிற மலர்களால் ஆன கண்ணி சூடித் தன்னை ஒப்பனை செய்து கொண்டு, தான் விரும்பும் பரத்தை வீடு நோக்கிச் செல்லும் அவள் கணவன், தெருவில் ஆடி மகிழும் மகனைக் கண்டான். மகன் மேல் உண்டான காதலால், பரத்தையை மறந்தான். அவனை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

மகனோடு வந்து நிற்கும் கணவன் கோலத்தைக் கண்டாள் அவள். அவன் கோலம், அவன் பரத்தை வீடு செல்லும் கருத்தோடு பண்ணிக் கொண்டது என்பதைத் தெளிவாக உணர்த்திற்று. அதனால், கணவன், ‘என்மீது கொண்ட காதலால் வந்திலன். மகனைக் கண்டவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/92&oldid=1129654" இலிருந்து மீள்விக்கப்பட்டது