பக்கம்:மருதநில மங்கை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை91


அவனைக் காணான்போல் செல்வது கூடாது. அவனை மனையின் சேர்த்துப் போதல் வேண்டும் எனும் கருத்தால், ஈங்கு வந்துளான்!” என்று கருதினாள்.

அக் கருத்தோடு அவனை நிமிர்ந்து நோக்கினாள். மகன், அவன் மார்பிற் பூசிய சந்தனத்தை அழிப்பதையும், முத்து மாலையை ஈர்த்து அறுப்பதையும், மாலையைப் பிய்த்து எறிவதையும் கண்டாள். உடனே, அவனை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். தன் செயல் கண்டு நாணி நிற்கும் கணவனை நோக்கி, “ஐய! இவனை எடுத்து அனைத்துக் கொள்ளாதே, இவன் நனிமிகக் கொடியவன், உன் மார்பிற் சந்தனத்தைச் சிதைப்பன். முத்தாரத்தை அறுப்பன். கண்ணியைக் கலைப்பன். சந்தனம் சிதைவுற்றதையும், மாலை அறுபட்டதையும், கண்ணிகசங்கியதையும், உன் பரத்தைக் காதலி பார்ப்பாளாயின், இது நீ வேறு ஒரு பரத்தையோடு தொடர்புகொண்டு, அவளைக் கூடியதால் நேர்ந்தது எனக் கொண்டு, உன்னைச் சினப்பள். புலந்து புல்லாது செல்வள். அதனால் நீ வருந்துவை. ஆகவே, இவனை விடுத்து, ஈண்டு இமைப் பொழுதும் நில்லாது, அவள்பால் விரைந்து செல்க!” எனக் கூறி வாயில் அடைத்தாள்.

“புள்இமிழ் அகல்வயல் ஒலிசெந்நெல் இடைப்பூத்த
முள்அரைத், தாமரை முழுமுதல் சாய்த்துத் தன்
வள்ளிதழ் உறநீடி வயங்கிய ஒருகதிர்,
அவைபுகழ் அரங்கின்மேல் ஆடுவாள், அணிநுதல்

வகைபெறச் செரீஇய வயந்தகம்போல் தோன்றும் 5
தகைபெறு கழனிஅம் தண்துறை ஊர! கேள்;
அணியொடு வந்துஈங்குஎம் புதல்வனைக் கொள்ளாதி;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/93&oldid=1129655" இலிருந்து மீள்விக்கப்பட்டது