பக்கம்:மருத்துவக் களஞ்சியம் தொகுதி - V.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிமுகம் - 3

"பொது மக்களிடையே உடல்நலம், உடல்நலம் பேணல் பற்றிய விழிப்புணர்ச்சியை உருவாக்குதலும், பலவகைப் பிணிகள் பற்றிய பொது விவரங்களை அவர்கட்கு எடுத்துரைத்தலும், உரிய நேரத்தில் முறையான மருத்துவ உதவியை நாடத் துணைபுரிதலுமே அடிப்படையான நோக்கம் என்று இந்த 'மருத்துவக் களஞ்சியம்' தொகுதிகளை வெளியிடும் தமிழ் வளர்ச்சிக் கழகம் எடுத்துரைத்துள்ளது.

உடல் பராமரிப்பு,பேணுதல்,ஆரோக்கியவாழ்வுக்கு அடிப்படை ஆகிய பல தலைப்புகளிலும், மருத்துவ முறைகள் குறித்தும் தமிழில் பரவலாகப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. எனினும், உடற்கூறு இயல், உடலியங்கியல், ஒவ்வோர் உறுப்பையும் பாதிக்கக்கூடிய நோய்கள் அவற்றின் காரணங்கள், அவற்றிற்கான சிகிச்சை முறைகள் பற்றி விளக்கமாகத் தற்போது வெளியிட்ப் படும் தொகுதிகளைப்போல, இதற்கு முன்னர் தமிழில் வந்துள்ளதாகத் தெரியவில்லை.

பொதுவாக, மக்களுக்குத் தங்கள் உடல் உறுப்புகள், அவை செயல்படும் விதம், அவற்றில் ஏற்படும் கோளாறுகள் பற்றிய அறிவு நிரம்பவே உளது. எனினும் நமது உடலியக்கத்தில், நம் உள்ளுறுப்புகளில் உற்பத்தியாகி, உடல் இயக்கத்திற்கும், உயிர் வாழ்வதற்குமே ஆதாரமாக உள்ள பல்வேறு வேதியத் திரவங்களைப் பற்றி அவர்கள் அவ்வளவாக அறிந்திருக்க மாட்டார்கள். மிகமிகக் குறைந்த அளவில், உடலின் சில உள்ளுறுப்புகள் சுரக்கும் வேதியப் பொருள், ஓர் ஆறடி மனிதனின் இயல்பான, அன்றாட வாழ்க்கையில், எத்துணை பெரும் பங்காற்றுகிறது என்பது எவருக்கும் வியப்பாக இருக்கும்.

உடலின் அனைத்து மண்டலங்களையும், ஆட்டிப்படைக்கும் இந்த நாளமில் சுரப்பிகளின் "மூர்த்தி சிறிதெனினும், கீர்த்தி மிகப் பெரிது" என்பதைக் கூடியவரை நல்ல தமிழில் கொடுத்துள்ளேன். இது பொதுமக்களுக்கு மட்டுமன்றி, உடல் இயங்கியல் மாணவர்களுக்கும் பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறேன்.


கு. கண்ணன்