பக்கம்:மருத்துவக் களஞ்சியம் தொகுதி - V.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிமுகம் - 2

தமிழில் மன நோய்களைப் பற்றி அனைவரும் எளிதாக அறிந்து கொள்வதற்காக எழுதப்பட்டது இப்பகுதி. நம்முடைய உற்றார் உறவினர் அண்டை அயலார் முனநோயால் தாக்கப்படும்போது, அவர்களை எப்போது எங்கே யாரிடம் அழைத்துச் செல்ல வேண்டும், அவருக்கு என்ன நேர்ந்தது, ஏன் நேர்ந்தது என்பனவற்றையும், மருத்துவர் என்ன சிகிச்சை அளிக்கிறார், அது எப்படிப் பயனளிக்கின்றது, அச்சிகிச்சையில் நாம் அளிக்க வேண்டிய ஒத்துழைப்பு யாது என்பனவற்றைப் பற்றியும் இப்பகுதியிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இதில் எல்லா மனநோய்களும் விளக்கப்படவில்லை. இப்பகுதியைப் படித்தபின் ஒருவர் மன நோய்க்குத்தானே மருத்துவம் செய்யலாம் என்ற கருத்தும் ஏற்படக்கூடாது.

தற்பொழுது பெரும்பாலான மன நோயாளிகள் அரசு அல்லது தனியார் பொது மருத்துவ மனைகளிலேயே வேண்டிய சிகிச்சை பெறுகின்றனர். இவர்களின் பராமரிப்பில் பங்கு பெறும் மருத்துவத் துறை சார்புப் பணியாளர்களின் பல பிரிவினரும் இதைப் படித்துப் பயன்பெறலாம். அது போன்றே செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகளும், தங்கள் தாய்மொழியிலே இந்நோய்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் கல்வி புகட்டும் ஆசிரியர்களும், அவர்களிடம் காணப்படும் குறைகளைப் புரிந்து கொள்ளவும் இப்பகுதி பயன்தரக் கூடும்.

மருத்துவத் தமிழில் கலைச் சொற்கள் இன்னும் ஒருமைப்படுத்தப்பட வில்லை; ஆதலால் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள கலைச் சொற்கள் ஆங்கிலச் சொற்களின் எதிர்த் தோன்றலாக இல்லாமல் கருத்தை மட்டும் வெளிப்படுத்து கின்றன. இம்முயற்சியில் ஓர் அளவு வெற்றி கிட்டக்கூடும் என்று நம்புகிறேன். இது எனது தமிழ் அறிவை விட எனது ஆர்வத்தையே காட்டுகிறது.

இந்நூலை எழுத ஊக்கமும் ஆக்கமும் தந்த மறைந்த என் நண்பர் டாக்டர் அ.கதிரேசன் அவர்களுக்கு நன்றி.

கையெழுத்துப் படிவத்தைத் தயாரித்துத் தந்த எனது மருமகள் திருமதி. நிர்மலா இரவீந்திரன் அவர்களுக்கும், தட்டெழுத்துப் படிவத்தை உருவாக்கித் தந்த திரு.கோ. செல்வபதி அவர்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன்.

- ஒ.சோமசுந்தரம் -