பக்கம்:மருத்துவக் களஞ்சியம் தொகுதி - V.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிமுகம் - 1

ஆங்கிலத்திலேயே கற்று அந்த மொழியிலேயே சிந்தித்துப் பேசி வந்த ஒருவருக்குத் தரப்பட்டிருக்கும் சவால் இது. ஆங்கிலம் நம் நாட்டை விட்டுப் போகக் கூடாது என்பதில் ஐயமில்லை. இது ஓர் உலக மொழி. இன்று நாம் பல நாடுகளுடன் ஆங்கிலம் மூலம்தான் உறவு கொள்ள முடிகிறது. அதிலும் அறிவியல் வளருவதற்கு ஆங்கிலம் இன்றியமையாதது.

எனவே, எப்படி ஒவ்வொருவரும் நம் நாட்டு மொழியை அறிந்திருப்பது அவசியமாகிறதோ, அதுபோல் உலக மொழியாகிய ஆங்கிலத்தையும் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

ஆயினும் சாதாரண மக்கள் தாய்மொழியிலேயே நம் விந்தையான மூளையைப் பற்றி அறியவும், மக்களை மாக்களிடமிருந்து வேறுபடுத்துவது 'மூளை' என்று அறிவிக்கவும் இந்தச் சிறிய தொண்டை ஏற்றுக் கொண்டேன்.

உதவிக்கு அகராதி வைத்துக் கொண்டு எழுதினாலும், பல இடங்களில் ஆங்கிலச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச்சொற்கள் எனக்குத் தெரியாததால் ஆங்கிலச் சொற்களையே உபயோகித்து உள்ளேன்.

இது ஒரு புதிய முயற்சி ; ஆகவே, தவறுகள் காண்பவர்கள் அவற்றைச் சுட்டிக் காட்டினால் பின்வரும் பதிப்புகளில் அதை நிவர்த்திக்க முயற்சி செய்யலாம்.


டாக்டர் த.க. கனகா