பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

X

                         

மேற்கொண்டு நிறைவேற்றினேன். அவற்றுள் இடம் பெற்ற மருத்துவக் கலைச்சொற்கள் பல அழகு தமிழில் பொருட் செறிவோடு அமைந்தவைகளாகும்.

தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் கலைக் கதிர்' திங்களிதழில் இடம் பெற்ற அறிவியல் கலைச் சொற்களையெல்லாம் பேராசிரியர் ஜி ஆர் தாமோதரன் அவர்கள் தொகுத்து ' அடிப்படை அறிவியல்', பயனுறு அறிவியல்' என்ற பெயர்களில் நூலுருவில் வெளியிட்டார். இவை பொருளறிவைக் காட்டிலும் மொழித்திறத்துக்கு முதன்மை தருபவைகளாக அமைந்துவிட்டதெனலாம் . 'யுனெஸ்கோ கூரியர் ' பன்னாட்டுத் திங்களிதழில் பன்னூறு மருத்துவக் கட்டுரைகள் கடந்த கால் நூற்றாண்டு காலமாக வெளிவந்துள்ளன. அவற்றைத் தமிழில் வெளியிடும்போது மொழிபெயர்ப்பாளர்களின் உதவியோடும் மருத்துவ வல்லுநர்களின் உறுதுணையோடும் பல நூறு மருத்துவக் கலைச் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தும் இனிய வாய்ப்பு எனக்கேற்பட்டது.

மருத்துவக் கலைச் சொற்களைப் பொறுத்தவரை கடந்த கால முயற்சிகளைக் கருத்திற்கொண்டு மருத்துவக் கலைச் சொல் களஞ்சியம்' நூலை உருவாக்கியுள்ளேன். மருத்துவத் துறை தொடர்பான பொருளறிவைப் புகட்டுவதற்கான துணைக் கருவியாகத்தான் மொழியைக் கையாண்டுள்ளேன். இயல்பிலேயே தமிழ் ஓர் அறிவியல் மொழியாக - அறிவியலை நுண்மாண் நுழைபுலத்தோடு உணர்த்தவல்ல ஆற்றல்மிகு மொழியாக - அமைந்திருப்பதால் கடினமானதாகப் பலரும் கருதும் கலைச் சொல்லாக்க முயற்சி எளிதானதாக அமைவதாயிற்று. தமிழைப் போற்றத் தெரிந்த அளவுக்கு அதன் அளப்பரிய ஆற்றலை அறிந்து கொள்ளவோ உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவோ முனையாமலிருக்கிறோம் என்பதுதான் உணமை. அறிவியலைப் பொறுத்தவரை தமிழின் தனித்திறத்தைச் செயல் வடிவாக உலகுமுன் எண்பிக்கும் வகையிலே என் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டுள்ளேன்.

தமிழைப் பொறுத்தவரை எட்டு வயதில் தந்தை பெரியாரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, தொடர்ந்து அறிஞர் அண்ணாவால் காலத்திற்கேற்பத் தமிழ்ப் பணி' அமைய வேண்டும் என்ற உணர்வு ஊட்டப்பட்டு, பேராசிரியர் தெ.பொ மீ. அவர்களால் மொழியியலறிவும் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரால் வேர்ச் சொல்லறிவும் மகாவித்துவான்.