புலவர் என்.வி. கலைமணி
129
‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பதை அறியாதவறா என்ன லூயி? படிப்பில் இரவும் - பகலும் கவனமாக இருந்தார். மாணவர்களுக்குப் பாடம் சொல்வது மூலம் தனது மறதியை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் அறிவொளியைப் பெற்றார்.
லூயி பாஸ்டியருக்கு பெசன்கான் பள்ளி கொடுத்து வந்த 300 பிராங்குகளையும் தனக்கு வேண்டியது போக, மிகுதி பிராங்குகளை பெற்றோர்களுக்கு உதவினார்.
நாளாகவே அவர் தனது படிப்புப் பொறுப்பை மட்டும் உணர்ந்தவராக இல்லை. பெற்றோர்களது ஏழ்மையைப் போக்கும் குடும்பப் பொறுப்பாளராகவும் திகழ்ந்தார். இப்போது தனது மனத்தை அடக்கியாளும் புலன் வீரனாகவும் லூயி விளங்கினார். பாரிஸ் நகர் சென்று பழையபடி பார்பட், பேர்பையர் ஆகியவர்களைச் சந்தித்து ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலோ வேறு எந்தக் கல்விக் கோட்டத்திலோ சேர்ந்து கற்க வேண்டும் என்ற தீராத ஆசையுடையவராக அவர் மாறினார்.
லூயி பாஸ்டியர், எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றார். என்றாலும், குறிப்பாக அறிவியல் பாடத்தில் நிறைய மதிப்பெண்களைப் பெற்றுவந்தார். சில தேர்வுகளில் அந்தப் பள்ளியிலேயே லூயி பாஸ்டியர்தான் முதல் மாணவனாக வெற்றி பெறுவார்.
இறுதித் தேர்வு வந்தது. லூயி பாஸ்டியர் அந்த தேர்வின் எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றார்! தேர்வில் வெற்றிபெற்று தனது சொந்த ஊரான ஆர்பாய் வந்து சேர்ந்தார்.
தனது பெற்றோரிடம் லூயி பாஸ்டியர் தேர்வில் பெற்ற வெற்றியைக் கூறி, அவர்களது பாதங்களைத தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.
பெற்றோர்கள், லூயி பாஸ்டியரை பாரிஸ் நகரில் கல்வி கற்பதற்குரிய எல்லா வசதிகளையும் செய்து கொண்டிருந்தார்கள்.
★★★