பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

165இவ்வளவு கொடுமையான சிகிச்சைக்குப் பிறகும் நாய்க் கடிப் பட்டவன் மீளா விட்டால், அதைப் பயங்கர நோய் என்று கூறாமல் பரிவுடைய வியாதி என்றா மக்கள் கூறுவர்?

இந்த நாய்க்கடி வேதனைகளை எல்லாம் நேரில் கண்ட, சொல்லக் கேட்ட - லூயி பாஸ்டியர், இதற்கு ஏதாவது ஒரு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமே என்று எண்ணினார். அதனால், அவரது முழுக் கவனமும் ரேபியீஸ் என்ற நோய் மீதே சென்றது.

வெறி நாய்களைக் கொண்டு வரச் சொல்லி அவற்றை ஆராய்ந்தார். வெறி நாயினுடைய உமிழ்நீர், ரத்தம் இவை களையும் ஆராய்ச்சி செய்தார். பல தடவை மைக்ராஸ்கோப் மூலமாக உற்று நோக்கினார்! அவற்றில் எந்த விதமான கிருமிகளும் அவருக்குத் தென்பட வில்லை.

நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் நாயினுடைய உமிழ் நீரில்; நோய்க்கான விஷம் இருக்கலாம் என்று அவர் கேள்விப்பட்டதால் அதையும் சோதனை செய்ய விரும்பினார். எப்படி அதைச் சோதித்தார் என்று நினைக்கிறீர் களா? இதோ அவர் சோதனை:

ஒரு கண்ணாடிக் குழாய்! அதில் இருபுறமும் திறந்துள்ள சந்துகள்! குழாய் முனை ஒன்றை வெறிநாயின் வாயிலே வைத்தார்! மறு முனையைத் தனது வாயில் வைத்து உமிழ் நீரை உறிஞ்சி எடுத்தார்! வெறி நாயின் உமிழ் நீர் நச்சுடையது என்று தெரிந்த பிறகும், அதைத் தன் வாயாலே உறிஞ்சி எடுத்தார் என்றால், லூயியின் தைரியத்தை எவ்வாறு பாராட்டுவது?

அது போகட்டும், வெறிநாய் வாயிலே கண்ணாடிக் குழாயை சொருகினாரே, அப்போது அந்த வெறி நாய் கடித்திருந்தால், லூயி கதி என்ன? இந்தச் செயல்களை எல்லாம் கேட்பவர்களுக்கு உடல் புல்லரிப்பு ஏற்படுமல்லவா?

இவ்வளவு அரும்பாடுபட்டு எடுத்து உமிழ்நீரை, லூயி மைக்ரோஸ்கோப் கருவி மூலம் சோதனை செய்தார். பல விதமான அழுக்குகள், தூசிகள் அந்த உமிழ் நீரில் காணப்பட்டன. அதனால் லூயி அதை ஆராய்ச்சி செய்யவில்லை.