உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

மருமக்கள்வழி மான்மியம்

எழுதிப் போடும்" என்றெலாம் சொல்லி 465
இந்திர சாலம் மந்திர சாலம்
மகேந்திர சாலமும் வல்லஇம் மனிதன்
நாட்பண மாக நாலு ரூபாயும்
வக்கா லத்தும் வாங்கிச் சென்றான்;
'அர்ஜி கொடுத்தேன், அவதி[1] மாற்றினேன். 470
பிரதி யுத்தரமும் பேஷாய்க் கொடுத்தேன்.
கேஸில் ஜயமும் கிடைக்கும், நிச்சயம்'
என்று வார்த்தைகள் இதமாய்க் கூறி,
இடையிடை ரூபாய் இருபது முப்பது
தட்டிக்கொள்வான்; (தலைவிதி! தலைவிதி!) 475
கொடுத்துவைத் தவர்கள் கொண்டு போனார்கள்:
என்விதி யானும் இப்படி யானேன்;
நாகைக் கோர்ட்டில் கேஸு நடந்தது;
நடந்தது, நடந்தது, நாலரை வருஷம்;
ஐயோ தெய்வமே! ஐயோ தெய்வமே! 480
இரவும் பகலும் இன்றி என் கணவர்
பட்ட பாடெலாம் பகர்வதும் எளிதோ?
திங்கட் கிழமை தெரிசனம் போச்சு,
திண்டாட் டங்கள் தீரா தாச்சு!
வெள்ளிக் கிழமை விரதம் போச்சு, 485
விவகா ரங்கள் மிகவே யாச்சு!
குளியும் போச்சு, கும்பிடும் போச்சு,
கோர்ட்டு வாசல் குடியிருப் பாச்சு!
மாதாந் தங்கள்[2] மறந்தே போச்சு.


  1. 470. அர்ஜி-பிராது, மனு. அவதி- வாய்தா.
  2. 489. மாதாந்தங்கள்: ஒவ்வொரு மாதக் கடைசியிலும் குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஏதேனுமோர் ஆலயத்துக்குச் சுவாமி தரிசனம் செய்யப்போகும் வழக்கம்.