உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலமுறை கிளத்து படலம்

43

தாழையம் பதிக்குத் தலைவர்—அவர் பெயர் 30
ஏழையான் சொல்வது இசையுமோ? அம்மா![1]
பாவியாம் என்னைப் பதினா றாண்டில்
ஐந்தாம் மனைவி யாக மணந்தனர்.
கணவர் வீட்டுக் கதையினைக் கேளும்;
மனைவியர் வேலை வகையினைக் கேளும்: 35
தொழுத்துச் சாணம்[2] வழிக்க ஒருத்தி,
தொட்டித் தண்ணீர் சுமக்க ஒருத்தி,
அடுக்களைச் சமையல் ஆக்க ஒருத்தி;
அண்டையில் அகலா திருக்க ஒருத்தி;
அத்தனை பேர்க்கும் அடிமை யாளாய்
ஏழை பாவி யானும் ஒருத்தி 40
எளியேன் சென்ற நாள்முத லாக
எல்லா வேலையும் என்தலை மேலாம்.
பெண்டிர் நால்வரும் பென்ஷன் பெற்றனர்.
பெரிய அக்காள் பெருமாப் பிள்ளை[3] 45
"ஏனடி அம்மா! யான்ஏ காங்கி.[4]
உரிய அரிசி உண்டெனில் சோறு:
உழக்குக் குறுநொய் உண்டெனில் கஞ்சி;
மக்களைப் பெற்ற மகரா சிகள்நீர்
உண்ண வேண்டும், உடுக்க வேண்டும்; 50


  1. 30-31. தாழையம்பதி - தாழைக்குடி என்ற ஊர்: நாகர்கோவிலுக்கு அருகிலுள்ளது. கணவர் பெயரை மனைவியர் சொல்லுதல் கூடாது என்பது சமுதாய வழக்கம்.
  2. 36. தொழுத்துச் சாணம் - மாட்டுத் தொழுவிலுள்ள சாணம்; தொழு-மாட்டுக்கொட்டில்.
  3. 45 பெருமாப் பிள்ளை: ஒரு பெண்ணின் பெயர்.
  4. 46. ஏகாங்கி - குழந்தையில்லாமல் தனியேயிருப்பவள்.